வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்களை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் முதல்வர்.!

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள வருவாய் கோட்டாட்சியர் மற்றும்வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 30 கோடியே 73 இலட்சத்து 62 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 வருவாய் கோட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள் மற்றும் 8 வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்களை திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வருவாய்த்துறை, மாநிலத்தின் நிருவாக அமைப்புக்கு முதுகெலும்பாக விளங்குவதோடு, சாமானிய மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும், அரசின் பல்வேறு சமூகப் பொருளாதாரத் திட்டங்களை செயல்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றுகிறது. பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் மாணவர்களுக்குத் தேவையான பல்வேறு ஆவணங்கள், பட்டா, சிட்டா, அடங்கல், சாதிச்சான்று, இருப்பிடச் சான்று, வருமானச் சான்று போன்ற பல்வேறு சான்றிதழ்களை வழங்கி வருகிறது. மழை, வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில் மக்கள் துயர் துடைக்கும் துறையாகவும் இத்துறை விளங்கி வருகிறது.

இத்துறையின் பணியினை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய அலுவலகக் கட்டடங்கள் கட்டுதல், துறை அலுவலர்களுக்கு குடியிருப்புகள் கட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.அந்த வகையில், சென்னை மாவட்டத்தில் 2 கோடியே 12 இலட்சத்து 24 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சென்னை (வடக்கு) வருவாய் கோட்டாட்சியர் அலுவலகக் கட்டடம் மற்றும் தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் 2 கோடியே 12 இலட்சத்து 24 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகக் கட்டடம்;கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலையில் 4 கோடியே 25 இலட்சத்து 53 ஆயிரம் ரூபாய் செலவிலும், கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சியில் 3 கோடியே 6 இலட்சத்து 94 ஆயிரம் ரூபாய் செலவிலும், கல்வராயன்மலையில் 4 கோடியே 25 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் செலவிலும், திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையில் 2 கோடியே 79 இலட்சத்து 4 ஆயிரம் ரூபாய் செலவிலும், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளத்தில் 2 கோடியே 75 இலட்சத்து 24 ஆயிரம் ரூபாய் செலவிலும், ஏரலில் 3 கோடியே 78 இலட்சத்து 86 ஆயிரம் ரூபாய் செலவிலும், கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியில் 2 கோடியே 79 இலட்சத்து 4 ஆயிரம் ரூபாய் செலவிலும், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் 2 கோடியே 79 இலட்சத்து 4 ஆயிரம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள்;என மொத்தம் 30 கோடியே 73 இலட்சத்து 62 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 வருவாய் கோட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள் மற்றும் 8 வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்களை முதல்வர் இன்று திறந்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிருவாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், இ.ஆ.ப., வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், இ.ஆ..ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

One thought on “வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்களை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் முதல்வர்.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *