
கூடலூர்: கூடலூர் அருகே வனப்பகுதிகளில் கால்நடைகளை மேய்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதை மறுபரிசீலனை செய்யக்கோரி கால்நடைகளுடன் ஊர்வலமாக வந்த பொதுமக்கள் வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக வன பகுதியில் கால்நடைகளை மேய்க்க தடைவிதித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.இந்த தடையை அமல்படுத்தினால் லட்சக்கணக்கான கால்நடைகள் மற்றும் கால்நடை தொழிலை நம்பி உள்ள மக்கள் பாதிக்கபடுவார்கள் என்பதால் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதனை வலியுறுத்தி நீலகிரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான நாட்டு மாடுகளை வளர்த்து வரும் மசினகுடி பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், வாகன ஓட்டுனர்கள் மசினகுடியில் போராட்டம் நடத்தினர்.அப்போது நீதிமன்ற உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும். 2006 வன உரிமை சட்டபடி மசினகுடி பகுதியில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் மக்களுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும். இரவு நேர போக்குவரத்து தடையை நீக்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. முன்னதாக கருப்பு கொடியை கையில் ஏந்தி காளை மாடுகளுடன் மசினகுடி பஜாரில் மக்கள் ஊர்வலமாக வந்தனர்.தொடர்ந்து மசினகுடி வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்ட அவர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். கால்நடைகளை வழக்கம்போல மேய்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி வனச்சரக அலுவலகத்தில் கூடலூர் எம்எல்ஏ பொன் ஜெயசீலன், மசினகுடி ஊராட்சி மன்ற தலைவி மாதேவி மற்றும் பொதுமக்கள் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கோரிக்கை மனுவை பெற்றுக்கொள்ள வனத்துறை அதிகாரிகள் இல்லாததால் அலுவலக ஊழியரிடம் அளித்தனர்.