
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கடந்த 2020-21-ம் கல்வியாண்டில் தொடங்கப்பட்டு, தற்காலிகமாக ரிஷிவந்தியம் அடுத்த அரியலூர் அரசு மேல்நிலைபள்ளியில் உள்ள 5 வகுப்பறைகளில் இயங்கி வருகிறது. இக்கல்லுாரியில் பி.ஏ. தமிழ், பொருளாதாரம், வணிகவியல், பி.எஸ்சி. கணினி அறிவியல், புள்ளியியல் ஆகிய 5 பாடப்பிரிவுகள் உள்ளன. இங்கு இரண்டாம் ஆண்டில் 278 மாணவ-மாணவிகளும்,, முதலாமாண்டில் 287 மாணவ-மாணவிகள் என மொத்தம் 565 பேர் கல்வி பயின்று வருகிறார்கள். இக்கல்லூரி தொடங்கி 2 ஆண்டுகளாகியும், நிரந்தர கட்டிடம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் கட்ட வருவாய்த்துறை மூலம் அத்தியூர் மற்றும் பகண்டை கூட்டு ரோட்டில் இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் நிரந்தர கட்டிடம் கட்ட மாவட்ட நிர்வாகம் கல்லூரிக்கு இடம் ஒதுக்கீடு செய்யாததால், கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டுமான பணிகள் தொடங்கப்படாமலே உள்ளது. இதனால் மாணவ- மாணவிகளின் கல்வித்தரம் வெகுவாக பாதிக்கப்படுகிறது.கிராமப்புற மாணவ, மாணவிகள் பயிலும் இக்கல்லூரியில் பேராசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. குறிப்பாக, தமிழ் மற்றும் ஆங்கில துறைக்கு பேராசிரியர்கள் இல்லை. 4 பேராசிரியர்கள் மாற்றுப்பணியாக இங்கு பணிபுரிகின்றனர். மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் வகையில் நூலகம், கணினி ஆய்வகம் அமைக்கப்பட வேண்டும். போதிய கழிவறை வசதி இல்லாததால் மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மாணவ-மாணவிகளின் எண்ணிக்கைகேற்ப வகுப்பறைகள் இல்லாததால், முதலாமாண்டு, இரண்டாமாண்டு வகுப்புகள் ஷிப்ட் முறையில் நடத்தப்படுகிறது.இந்தநிலையில், இன்னும் ஓரிரு வாரங்களில் முதலாமாண்டு மாணவ, மாணவிகள் சேர்க்கை தொடங்க உள்ளது. இதில் ஒரு பாடப்பிரிவுக்கு 70 மாணவர்களை சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி புதிதாக 350 மாணவ-மாணவிகளை சேர்க்க வேண்டும். சேர்க்கை முடிந்த பிறகு கல்லூரியில் பயிலும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 900-க்கும் அதிகமாக இருக்கும். கல்லூரி நடத்த 16 வகுப்பறைகள் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது 5 வகுப்பறைகளில் மாணவ-மாணவிகள் அமர வைக்கப்பட்டு, சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படுகிறது. மாணவர்களின் எண்ணிக்கை உயரும் பட்சத்தில், 3-ம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும் வகுப்பறை இல்லாமல் கல்வி பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும். எனவே வரும் கல்வியாண்டு தொடங்குவதற்குள் ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு போதிய இடவசதிகளுடன் கூடிய சொந்த கட்டிடத்தை கட்டுவதோடு, மாணவர்களின் எண்ணிக்கைகேற்ப போதிய பேராசிரியர்களை நியமிக்க வேண்டும் எனவும் கல்லூரி மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.