
புதுடெல்லி: லாரிகளில் ஓட்டுநர் கேபின்களுக்குள் விரைவில் குளிரூட்டிகளை பொருத்த வேண்டும் என்று வாகன உற்பத்தியாளர்களுக்கு மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மகேந்திரா நிறுவனம் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியது: “இந்த நிகழ்வுக்கு வருவதற்கு முன்பு, லாரிகளில் உள்ள ஓட்டுநர் கேபின்களில் கட்டாயம் ஏசி பொருத்துவதற்கான கோப்புகளில் கையொப்பமிட்டேன். 43 முதல் 47 டிகிரி வெப்ப சூழலில் நமது ஓட்டுநர்கள் வாகனத்தை இயக்குகிறார்கள். அவர்களை பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.
நான் அமைச்சரானதும் ஏசி கேபின் அறிமுகப்படுத்தினேன். ஆனால், லாரியின் விலை உயரும் எனக் கூறி சிலர் எதிர்த்தனர். இன்று கட்டாய ஏசி கேபின்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளேன். இந்தியாவில் ஓட்டுநர்கள் பற்றாக்குறையின் காரணமாக நாளொன்றுக்கு 14-16 மணிநேரம் ஓட்டுநர்கள் பணிபுரியும் சூழல் உள்ளது. பிற நாடுகளில் லாரி ஓட்டுவதற்கான நேரக் கட்டுப்பாடுகள் உள்ளது.” என்று தெரிவித்தார். மேலும், லாரி ஓட்டுநர் கேபின்களில் ஏசி பொருத்துவதற்கான காலக்கெடு ஏதும் அமைச்சர் குறிப்பிடவில்லை. 2025-க்குள் இத்திட்டம் செயல்படுத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது.