
புதுச்சேரி: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் புதுவை மாநிலத்தில் 2 நாட்கள் நடக்கிறது. வாக்காளர் திருத்த முகாம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பாரதியார் பல்கலைக்கூட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மணல் சிற்பம் வடிவமைத்தனர். வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாண்டி மெரினா கடற்கரை பகுதியில் மணல் சிற்பம் உருவாக்கப்பட்டது. இதில் இரண்டு தினங்களுக்கு முன் இறந்த மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமியின் சிற்பம் உருவாக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேர்தல்துறை அதிகாரிகள் யானை தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னம் என்பதால் யானை மணல் சிற்பம் இடம் பெறக்கூடாது என்று உத்தரவிட்டனர். இதையடுத்து 9 மணி நேரமாக உருவாக்கப்பட்ட யானையின் மணல் சிற்பம் நள்ளிரவே கலைக்கப்பட்டு தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு சிற்பங்கள் மட்டுமே இடம்பெற்றது. இந்த நிலையில் இன்று அதிகாலை பெய்த மழையினால் தேர்தல் விழிப்புணர்வு மணல் சிற்பங்கள் கலைந்து விட்டது. யானை மணல் சிற்பம் கலைக்கப்பட்ட இடத்தில் தேர்தல் துறை என்ற வாசகம் எழுதப்பட்டது.