லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வந்த ரகசிய தகவல்… துணை ஆட்சியர் காரில் சிக்கிய ரூ.40 லட்சம் பணம்!

திருச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை துணை ஆட்சியராக பணிபுரிந்து வருகிறார் சரவணக்குமார். குறிப்பிட்ட பணிகளுக்காக லஞ்சமாக பெறப்பட்ட லஞ்ச பணத்தை, இவர் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி கார் மூலம் எடுத்து செல்வதாக சென்னை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. உடனே இந்த தகவல் விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிடைத்த தகவலின் பேரில், விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி தேவநாதன் தலைமையிலான குழுவினர், அந்த கார் வருகிறதா என சாதரண உடையில் நின்று நோட்டமிட்டு வந்துள்ளனர். இந்நிலையில், விழுப்புரம் அருகே உள்ள கெடிலம் பகுதியை அந்த குறிப்பிட்ட பதிவு எண் கொண்ட கார் வந்தபோது, மடக்கி பிடித்துள்ளனர். அந்த காரில் இருந்த திருச்சி ஆதிதிராவிட நலத்துறை துணை ஆட்சியர் சரவணக்குமாரிடம் விசாரணை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், காரில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.அப்போது, பை ஒன்றில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த பணத்தை கணக்கிட்டு பார்த்தபோது சுமார் 40,00,000 ரூபாய் இருந்துள்ளது.

உடனே, அந்த பணத்தை பறிமுதல் செய்த விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், சரவணக்குமார் மற்றும் உடன் வந்த இருவரை சந்தேகத்தின் பேரில் அழைத்துச் சென்று, விழுப்புரம் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த பணம் எப்படி வந்தது? எதற்காக இப்பணம் எடுத்துச் செல்லப்படுகிறது? யாரிடம் கொடுக்கப்பட உள்ளது? உள்ளிட்ட பல்வேறு சந்தேக கோணங்களில் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. திருச்சி மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை துணை ஆட்சியர், காரில் கொண்டுச் சென்ற 40 லட்சம் ரூபாய் ரொக்க பணம், உளுந்தூர்பேட்டை அருகே கெடிலம் பகுதியில் லஞ்ச ஒழிப்புத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

One thought on “லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வந்த ரகசிய தகவல்… துணை ஆட்சியர் காரில் சிக்கிய ரூ.40 லட்சம் பணம்!

  1. நிங்கள் எடுக்கும் செய்திகள் அதிரடியாக உளௌளது உங்கள் மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *