
மதுரை:திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஸ்பேரோ குளோபல் நிறுவனம் வாயிலாக அறம் மக்கள் சங்கத்தலைவர் ராஜா, அவரது சகோதரர் ரமேஷ் மற்றும் அழகர்சாமி ஆகியோர் பொதுமக்களிடம் ரூ. 200 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதில் பாதிக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்டோர் இன்று காலை மதுரை ஒத்தக்கடை தேவர் சிலை முன்பு திரண்டனர். அவர்கள் மதுரை ஐகோர்ட்டு பதிவாளரிடம் புகார் கொடுப்பதற்காக, பேரணியாக புறப்பட்டு சென்றனர். இந்த பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை ஒத்தக்கடை போலீசார் சுற்றிவளைத்து 200-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.தனியார் நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டோரின் புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஸ்பேரோ குளோபல் டிரேடு ரியல் எஸ்டேட் நிறுவனம் கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை ரூ. 200 கோடிக்கு மேல் மக்களின் அறியாமையை பயன்படுத்தி வசூல் செய்து உள்ளனர். இந்த பணத்தில் அவர்கள் பினாமி பெயர்களில் தமிழகத்தில் மட்டும் குறைந்தது ரூ. 1000 கோடிக்கு சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர்.இது குறித்து பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் நேர்மையான காவல்துறை, உயர் அதிகாரி மூலம் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைத்து அழகர்சாமி, ரமேஷ்குமார், மற்றும் இதர குற்றவாளிகளை சிறையில் அடைத்து அவர்களிடம் முழுமையான சொத்து விபரங்களை பெற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறுகிய கால கட்டத்தில் நிவாரணம் பெற செய்ய ஆவண செய்ய வேண்டும்.சிவகங்கை கோர்ட்டில் 1-வது முதல் 14-வது குற்றவாளிகளுக்கு எந்த ஒரு பிணை தொகையும் இல்லாமல் போலி வாக்குமூலத்தை வைத்து, உயர்நீதிமன்ற தீர்ப்பையும் மதிக்காமல் பெயில் வழங்கப்பட்டு உள்ளது. அவற்றைத் திரும்பப் பெற வேண்டும்.இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது நீதிமன்றம் தீவிர விசாரணை செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.