
முன்னூர்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியம் முன்னூர் ஊராட்சிக்குட்பட்ட முத்தாம்பாளையம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் குடிநீர் வசதி இல்லாமல் அவதிப்பட்டு வந்த மக்கள் குடிநீர் வசதி செய்து தரக்கோரி உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் மனு அளித்தனர்.
இதை அடுத்து ஊரக வளர்ச்சித்துறை சார்பில் சமுதாயகிணறு மற்றும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டுவதற்கு ரூ.12 லட்சம் நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கான கட்டுமான பணிகள் கடந்த 1.7.2021 அன்று தொடங்கப்பட்டு 2.2.2022 அன்று முடவடைந்தது. ஆனால் பணிகள் முடிந்து ஓராண்டாகியும் இன்னமும் முத்தாம்பாளையம் கிராம மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை. முத்தாம்பாளையத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முன்னூர் கிராமத்துக்கு ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அனைவரும் நடந்து சென்று குடிநீர் பிடித்து வர வேண்டிய நிலை உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாடி வருகின்றனர். பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்ட பொது கிணறு மற்றும் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி காட்சி பொருளாக மாறி விட்டது. மேலும் இந்த திட்டத்தில் ஊழல் ஏதாவது நடந்து இருக்கலாம் என்றும் உடனடியாக பொதுகிணற்றுக்கும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கும் இடையே குழாய் அமைத்து குடிநீர் வினியோகம் செய்ய விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.