ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகர் படம் போட வேண்டும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கோரிக்கை.!

புதுடெல்லி: டெல்லி முதல்-மந்திரியும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் புதிதாக வெளியிடப்படும் கரன்சி (ரூபாய்) நோட்டுகளில் இந்து கடவுள்களான லட்சுமி மற்றும் விநாயகர் ஆகியோரது உருவங்களை இடம்பெற செய்ய வேண்டும் என மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளார். தொடர்ந்து அவர் கூறும்போது, ‘நாம் முயற்சிகளை மேற்கொண்டாலும், கடவுள்களின் ஆசி இல்லையென்றால் சில சமயங்களில் நம்முடைய அந்த முயற்சிக்கு பலன் இருக்காது. அதனால், புதிதாக வெளியிடப்படும் ரூபாய் நோட்டுகளில் ஒருபுறம் மகாத்மா காந்தி உருவமும், மற்றொரு புறம் பெண் கடவுள் லட்சுமி மற்றும் கடவுள் விநாயகர் படங்கள் இடம்பெற வேண்டும். இரு தெய்வங்களின் உருவங்கள் ரூபாய் நோட்டுகளில் இருப்பது, நாட்டை வளம்பெற செய்ய உதவும். இதனால், நாட்டின் பொருளாதார சூழ்நிலை மேம்படும். ஒட்டுமொத்த நாடும் ஆசிகளை பெறும். இதுபற்றி நாளை அல்லது நாளை மறுநாள் நான் மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளேன்’ என்றார். இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவில் கரன்சியில் விநாயகர் படம் இடம்பெற்றுள்ளது. இந்தோனேசியாவில் செய்ய முடியும்போது நம்மால் முடியாதா? என்றும் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன், இந்திய ரூபாய் நோட்டுகளில் காந்திக்கு பதிலாக நேதாஜி படம் இடம் பெற வேண்டும் என அகில பாரத இந்து மகாசபை வலியுறுத்தி இருந்தது. இதுபற்றி அகில பாரத இந்து மகாசபையின் மாநில செயல் தலைவர் சந்திரசூர் கோஸ்வாமி, கொல்கத்தா நகரில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசும்போது, இந்திய விடுதலை போராட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பங்கு எந்த வகையிலும் மகாத்மா காந்திக்கு குறைந்ததில்லை. அதனால், இந்தியாவின் தலைசிறந்த சுதந்திர பேராட்ட வீரர் நேதாஜிக்கு கவுரவம் அளிக்கும் சிறந்த வழி, அவரது புகைப்படம் கரன்சி நோட்டுகளில் இடம்பெற செய்ய வேண்டும். காந்திஜியின் புகைப்படத்திற்கு பதிலாக நேதாஜியின் புகைப்படம் இடம்பெற வேண்டும் என கூறினார். இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில், ரூபாய் நோட்டுகளில் லட்சுமி மற்றும் விநாயகர் படங்கள் இடம் பெற வேண்டும் என கெஜ்ரிவால் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *