
சென்னை: ராயபுரம் பகுதியில் திமுக பிரமுகர் சக்கரபாணி துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் அவரின் தலைப் பகுதியை அடையாறு கூவம் ஆற்றில் வீசி விட்டு சென்றதாக கிடைத்த தகவலையடுத்து அதனை தேடும் பணியில் நள்ளிரவு முதல் தீயணைப்பு துறையினரும், காவல்துறையினரும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை மணலி பகுதியை சேர்ந்த 65 வயதான திமுக பிரமுகர் சக்கரபாணி வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டு ராயபுரம் பகுதியில் வீடு எடுத்து அந்தப் பெண்ணுடன் தங்கி வந்துள்ளார், கடந்த 10ஆம் தேதி முதல் சக்கரபாணி காணவில்லை என அவரது குடும்பத்தார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் ராயபுரம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.ராயபுரம் பகுதியில் ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் வீட்டின் உள்ளே சென்று சோதனையிட்டபோது, அங்கு சாக்கு மூட்டையில் கை, கால்கள் மட்டும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் விசாரணையில் தமீம்பானு என்பவரது வீட்டில் சக்கரபாணி இருந்து வந்ததாகவும், அப்போது அவருடைய சகோதரர் வாஷிங் பாஷாவுக்கும், சக்கரபாணிக்கும் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றவே அருகிலிருந்த அருவாமனை கொண்டு சக்கரபாணியை வெட்டியுள்ளார்.இதனையடுத்து உடலை துண்டு துண்டாக வெட்டி, தலையை அடையாறு பாலத்திலும், உடல் பகுதிகளை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலும் , கை கால்களை மட்டும் வீட்டிலே வைத்து தலைமறைவாகிவிட்டனர்.பாஷாவை கைது செய்த ராயபுரம் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வந்தனர். அதனைத் தொடர்ந்து பாஷா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தலையை அடையாறு திரு.வி.க பாலத்தில் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் தீவிரமாக நள்ளிரவு முதல் தேடி வருகின்றனர் ராயபுரம் தனிப்படை காவல்துறையினர்.மற்றொரு குழுவினர் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரம் என்பதாலும் ஆற்றில் நீரின் வேகம் அதிகமாக உள்ளதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. அதனால் காலை பணிகள் தொடரும் என உதவி ஆணையர் வீரகுமார் தகவல் தெரிவித்தார்.