ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் 3-வது மாடியில் இருந்த ஏசி இயந்திரம் கழன்று கீழே விழுந்ததில், மருத்துவமனை ஊழியர் உயிரிழப்பு.!

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் 3-வது மாடியில் இருந்த ஏசி இயந்திரம் கழன்று கீழே விழுந்ததில், மருத்துவமனை ஊழியர் உயிரிழந்தார்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை ஆதிகேசவன் தெருவைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு(62). இவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், அறுவை சிகிச்சைப் பிரிவில் டெக்னீஷியனாகப் பணியாற்றினார். பணி ஓய்வுக்குப் பிறகு, அதே மருத்துவமனையில் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் ஒப்பந்த ஊழியராகப் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், நேற்று காலைவழக்கம்போல பணிக்கு வந்ததிருநாவுக்கரசு, மருத்துவமனையின் டவர் கட்டிடம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்தக் கட்டிடத்தின்3-வது மாடியில் பொருத்தப்பட்டிருந்த ஏசி இயந்திரம் திடீரென கழன்று கீழே விழுந்தது.

அப்போது, கீழே நடந்து சென்று கொண்டிருந்த திருநாவுக்கரசு மீது ஏசி இயந்திரம் விழுந்ததில், அவர் பலத்த காயமடைந்தார். மயங்கி விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை காவல்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் விசாரணை நடத்தியதில், ஏசி இயந்திரம் நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் இருந்ததும், பராமரிப்பு இல்லாததால் தானாக கழன்று கீழே விழுந்ததும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன், விசாரணைக் கமிட்டியை நியமித்துள்ளார். ஊழியர்களின் அஜாக்கிரதையால் இந்த சம்பவம் நடந்தது தெரியவந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வலியுறுத்தல்: சென்னை ராஜீவ் காந்தி அரசுமருத்துவமனையில் சரிவர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்று புகார் தெரிவித்துள்ள பொதுமக்கள், இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் இனியும் நடைபெறாமல் இருக்கும் வகையில், உரிய முறையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *