
மோர்பி: குஜராத்தில் மோர்பி நகரில் 140கும் மேற்பட்டோர் உயிரிழப்புக்கு காரணமான தொங்கு பாலம் அறுந்து விழுந்த இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து 300 கி.மீ., தூரத்தில் மோர்பி என்ற நகரம் உள்ளது. சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடத்தில் தர்பங்கா – நஜார்பாக் பகுதிகளை இணைக்கும் வகையில் மச்சூ ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தொங்கு பாலம் அக்.,30 ல் இரவு திடீரென அறுந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 135 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, சம்பவ இடத்திற்கு வந்து நேரில் ஆய்வு செய்தார். அங்கு, விபத்து குறித்து மாநில உள்துறை அமைச்சர் விளக்கி கூறினார். பிறகு, மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுடன் ஆலோசனை நடத்திய மோடி, பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.