மேற்கத்திய நாடுகள் சாதி பாகுபாடு சவால்களை தற்போது எதிர்கொள்வது ஏன்? பிபிசி செய்தி தகவல்..!

அமெரிக்காவின் கொலராடோ மற்றும் மிஷிகன் மாகாணங்கள் சமீபத்தில் ஏப்ரல் 14 ஆம் தேதியை டாக்டர் பிஆர் அம்பேத்கர் சமத்துவ தினமாக அறிவித்தன. அதற்கு சில நாட்களுக்கு முன்பு, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணமும் ஏப்ரல் மாதத்தை தலித் வரலாற்று மாதமாக அறிவித்தது.இந்திய அரசியலமைப்பின் சிற்பியான அம்பேத்கர், சாதி படிநிலையில் அடியில் இருந்த தலித்துகளின் மாபெரும் தலைவர் ஆவார். இவர் 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி பிறந்தார்.இந்தியாவின் அரசியலமைப்பும், நீதிமன்றங்களும் நீண்ட காலமாக தாழ்த்தப்பட்ட நிலையில் இருக்கும் சாதிகள் மற்றும் தலித்துகளை, வரலாற்று ரீதியாக பின்தங்கிய குழுக்களாக அங்கீகரித்து, ஒதுக்கீடுகள் மற்றும் பாகுபாடுகளுக்கு எதிரான சட்டங்களின் வடிவத்தில் பாதுகாப்புகளை வழங்கியுள்ளன.இப்போது தலித் ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்களும் மேற்கத்திய நாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில், இதேபோன்ற அங்கீகாரத்தைக் கொண்டுவர முயற்சிக்கின்றனர். ஆர்வமும், விடா முயற்சியும் கொண்ட இந்திய புலம்பெயர்ந்தோர் “முன் மாதிரி சிறுபான்மையினராகத் திகழ” கடும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர். நாட்டில் எளிதாக ஒன்று கலக்கின்றனர்.”இந்துக்கள் பூமியில் உள்ள மற்ற பகுதிகளுக்கு குடிபெயர்ந்தால், இந்திய சாதி ஒரு உலகப் பிரச்சனையாக மாறும் என்று அம்பேத்கர் ஒருமுறை சொன்னார். அதுதான் இப்போது அமெரிக்காவில் நடக்கிறது” என்று அமெரிக்காவை தளமாகக் கொண்ட சிவில் உரிமைகள் குழுவான அம்பேத்கர் சர்வதேச மையத்தின் ராம கிருஷ்ண பூபதி பிபிசியிடம் தெரிவித்தார்.பல தசாப்தங்களாக, ஆதிக்க சாதி இந்தியர்களால் குறிப்பாக பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட பாகுபாடு யாருடைய கவனத்தையும் ஈர்க்கவில்லை என்று தலித் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பலரும் இதைப் பற்றி பேசுகிறார்கள்.NPR நிகழ்ச்சியான ரஃப் ட்ரான்ஸ்லேஷனின், 2020 செப்டம்பர் எபிசோடில், சாம் கொர்னேலியஸ் என்ற மாற்றுப்பெயரைப் பயன்படுத்தும் தொழில்நுட்ப ஊழியர் ஒருவர், பிராமண சாதி ஆண்கள் அணியும் பூணூலை அணிந்துள்ளாரா என்பதைக் கண்டுபிடிக்க சக பணியாளர்கள் தன்னை முதுகில் தட்டுவதைப் பற்றி பேசினார்.”அவர்கள் நீந்த அழைப்பார்கள், ‘ஏய், வாருங்கள் நாம் நீந்தலாம்’ என்று சொல்வார்கள். ஏனென்றால் எல்லோரும் தங்கள் சட்டையை கழற்றுவார்கள். யார் பூணூல் அணிந்திருக்கிறார்கள், யார் அணியவில்லை என்பது அப்போது அனைவருக்கும் தெரியும்,” என்று அவர் அந்த நிகழ்ச்சியில் கூறினார்.பல்கலைக்கழக விருந்துகளில் இந்தியர்கள் ஒருவருக்கொருவர் சாதியை பற்றிக் கேட்பதால் பயமாகவும் சங்கடமாகவும் இருப்பதாக, வேறு சிலர் தெரிவித்தனர்.ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த ஆர்வலர்களின் பணி மற்றும் ஆன்லைனில் “பாதுகாப்பான” இடங்களின் அதிகரிப்பு ஆகியவை, சமீபத்திய ஆண்டுகளில் இந்த சிக்கல் வெளிச்சத்திற்கு வருவதை அதிகரித்துள்ளன.ஜார்ஜ் ஃபிளாய்ட் மற்றும் ப்ரயோனா டெய்லர் கொலைகளுக்குப் பிறகு தீவிரமடைந்த ‘தி பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ எதிர்ப்புகளும் ஒரு விளைவை ஏற்படுத்தின என்று மேயினில் உள்ள கோல்பி கல்லூரியில் சாதிப் பாதுகாப்புக்காகப் போராடிய உதவிப் பேராசிரியர் சோன்ஜா தாமஸ் கூறினார்.தங்கள் சொந்த சமூகங்களிலேயே கறுப்பினத்தவர்க்கு எதிரான போக்கு, சாதி பாகுபாடு மூலமாக சொல்லப்படக்கூடும் என்று தெற்காசிய அமெரிக்கர்கள் யோசித்துக்கொண்டிருக்கிறார்கள்.கடந்த தசாப்தத்தில் ஒரு பெரிய மாற்றம் என்னவென்றால், ஆதிக்க சாதியைச் சேர்ந்த பலர் தங்கள் வரலாற்று ரீதியான சிறப்புரிமை விஷயத்தில் போராடுகிறார்கள் என்று திருமதி தாமஸ் விளக்கினார்.”நம்முடைய தாய், தந்தையர் ஒரு சூட்கேஸ் மற்றும் கையில் கொஞ்சம் டாலர்களுடன் இங்கு வந்ததைப் பற்றிய கதைகளை நாம் அனைவரும் நன்றாக அறிவோம். ஆயினும், இந்தியாவில் தலைமுறை தலைமுறையாக இருந்துவந்த சாதிச் சலுகைகள், அவர்களும், அவர்களது குழந்தைகளும் இந்த நாட்டில் நன்றாகச் செயல்பட எவ்வாறு நம் பெற்றோருக்கு உதவியது என்பதைப் பற்றி நமக்கு சிறிதும் தெரியாது,” என்று புலிட்சர் மையத்தின் நிதியுதவியுடன் நடத்தப்படும் ‘காஸ்ட் இன் அமெரிக்கா’ தொடரில் ஆவணப்படத் தயாரிப்பாளர் கவிதா பிள்ளை கூறினார்.2020 ஆம் ஆண்டு கலிபோர்னியா மாநிலம் ஐடி நிறுவனமான சிஸ்கோ மற்றும் அதன் இரண்டு ஆதிக்க சாதி ஊழியர்களுக்கு எதிராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு தலித் சக ஊழியர் மீதான துன்புறுத்தல் மற்றும் பாகுபாடு தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டது, அமெரிக்காவில் ஒரு முக்கிய தருணம் என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர்.”இந்த வழக்கு ஏற்கனவே பின்னணியில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு நம்பகத்தன்மையை அளித்தது” என்று வட அமெரிக்காவின் அம்பேத்கர் சங்கம் (AANA) பிபிசியிடம் தெரிவித்தது.சிஸ்கோ வழக்கு பகிரங்கமானவுடன், தலித் உரிமைகள் அமைப்பான ஈக்வாலிட்டி லேப்ஸ் அமைத்த ஹாட்லைன், கூகுள், பேஸ்புக், ஆப்பிள் மற்றும் சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள பல நிறுவனங்களின் 250க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப ஊழியர்களிடமிருந்து சாதி அடிப்படையிலான துன்புறுத்தல் தொடர்பான புகார்களைப் பெற்றது.கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டின் தொழிலாளர் சங்கத்திலிருந்து சிஸ்கோ வழக்கிற்கு ஆதரவு கிடைத்தது.”நமது பூர்வீக நாடுகளுக்கு வெளியே ஒரு அமெரிக்க நிறுவனம் சாதியை ஒரு குறிப்பிடத்தக்க சிவில் உரிமைப் பிரச்சனையாகவும், அரசு வழக்குகள் தேவைப்படும் ஒன்றாகவும் அங்கீகரிப்பது இதுவே முதல் முறை” என்று ஈக்வாலிட்டி லேப்ஸ் அமைப்பின் நிறுவனர் தேன்மொழி சௌந்தரராஜன் பிபிசியிடம் கூறினார்.2021 ஆம் ஆண்டில், இந்து அமைப்பான போச்சாசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா (BAPS), தலித் தொழிலாளர்களை பல்வேறு இடங்களில் கோயில்களைக் கட்டுவதில் ஈடுபடுத்தி, அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை விட மிகக் குறைவாகவே சம்பளம் அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.அதே ஆண்டு, கலிபோர்னியா பல்கலைக்கழகம் டேவிஸ், கோல்பி கல்லூரி, ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மற்றும் கலிபோர்னியா ஜனநாயகக் கட்சி ஆகியவை தங்கள் கொள்கைகளில் சாதிப் பாகுபாடுகளுக்கு எதிரான பாதுகாப்பைச் சேர்த்தன.2022 ஜனவரியில், கலிபோர்னியா மாகாண பல்கலைகழகம், தனது கொள்கையில் சாதியை பாதுகாக்கப்பட்ட வகையாகச் சேர்த்த நாட்டின் முதல் மற்றும் மிகப்பெரிய பல்கலைக்கழக அமைப்பாக மாறியது.கால் ஸ்டேட் மாணவர் பிரச்சாரத்திற்கு கலிபோர்னியாவில் உள்ள பெரிய தொழிலாளர் சங்கங்களின் ஆதரவு இருந்தது. இது ஒரு “கேம்சேஞ்சர்” ஆகும். ஏனெனில் சாதி சமத்துவம் என்பது தொழிலாளர்களின் உரிமைப் பிரச்சனை என்பதை இது எடுத்துக்காட்டுகிறது என்று திருமதி சௌந்தரராஜன் கூறினார்.தொழிலாளர் இயக்கத்தின் இந்த ஒற்றுமை, சாதி சமத்துவம் குறித்த உலகளாவிய உரையாடல்களை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அமெரிக்காவிற்கு சாதியை விளக்குவது எப்படி?”பெரும்பாலும் தோல் நிறத்தை அடிப்படையாகக் கொண்ட இனம் போலல்லாமல், சாதி அமைப்பின் சிக்கலான தன்மையை அமெரிக்கர்களுக்கு விளக்குவது கடினம் என்று பூபதி கூறினார்.”இது பிறப்பால் தீர்மானிக்கப்படுகிறது. இந்து அமைப்பில் நீங்கள் எங்கு நிற்கிறீர்கள் என்பதை இது தீர்மானிக்கிறது,” என்று அவர் கூறினார்.நேபாளி வம்சாவளியைச் சேர்ந்த கல்வியாளரும், கால் ஸ்டேட் கொள்கை மாற்றத்திற்கான முன்னணி அமைப்பாளருமான பிரேம் பரியார், இசபெல் வில்கர்சனின் புத்தகத்தில் இருந்து “சாதி என்பது எலும்பு , தோல் என்பது இனம் ” என்ற உருவகத்தை அடிக்கடி விளக்கமாக பயன்படுத்துவதாகக் கூறினார்.2020 ல் வெளியான, Caste: The origins of our discontents, என்ற புத்தகம், சாதி மற்றும் இனத்தின் வரலாறுகளை ஒப்பிட்டுப் பார்த்தது. மேலும் இது அமெரிக்காவின் பிரதான நீரோட்டத்தில் சாதிப் பாகுபாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்ட உதவியதாக பரியார் கருதுகிறார்.சாதிப் பாகுபாடு “இந்தியப் பிரச்சனை”, எனவே அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் அதை ஏன் விவாதிக்க வேண்டும் என்று கூறிய அவரது துறையின் ஆதிக்க சாதி ஆசிரியர்கள், பரியாரின் அனுபவத்திற்கு முக்கியத்துவம் தரவில்லை. சாதியை ஒப்புக்கொள்வதற்கான இந்த வெறுப்பு, ஆதிக்க சாதியினரிடையே அசாதாரணமானது அல்ல என்று திருமதி தாமஸ் கூறினார். அவரது பணி கிறிஸ்தவத்தில் சாதி மற்றும் பாலினத்தை ஆராய்கிறது.”இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் போலவே சிறுபான்மையினரான தெற்காசியர்கள், “சலுகை” என்ற வார்த்தையைப் பயன்படுத்தினால், அமெரிக்க சமூகத்தில் தாங்கள் அடைந்துள்ள நிலை குறைத்து மதிப்பிடப்படுமோ என்று அஞ்சுகிறார்கள்,”என்று அவர் விளக்கினார்.ஆனால் சாதி என்பது இந்து மதத்துடன் மட்டுப்படுத்தப்படாமல், ஒவ்வொரு தெற்காசிய மதத்திலும் இருக்கும் சமத்துவமின்மையின் கட்டமைப்பாகும் என்று ஹார்வர்டில் உள்ள மானுடவியல் மற்றும் தெற்காசிய ஆய்வுகள் பேராசிரியர் அஜந்தா சுப்ரமணியம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கால் ஸ்டேட்டிற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டார்.”மேலும், பல ஒடுக்கப்பட்ட சாதி நபர்கள் இந்துக்கள்” என்று அவர் எழுதினார்.அமெரிக்காவில், உரிமைகள் இயக்கத்தின் வெற்றியை தொடர்ந்து பெரும்பாலும் இந்து அமெரிக்கன் அறக்கட்டளை (HAF) போன்ற வலதுசாரி இந்திய அமெரிக்க குழுக்களின் எதிர்ப்பு வெளியாகிறது. இந்த அமைப்புகள் புலம்பெயர்ந்தோரின் சில பகுதியினரை இதற்கு எதிராக அணிதிரட்டுகிறது.கால் ஸ்டேட் கொள்கை மற்றும் சிஸ்கோ வழக்குக்கு எதிராக அறக்கட்டளை நின்றது. அவற்றை “பாகுபாடு” என்றும் “இந்து அமெரிக்கர்களின் உரிமைகள்” மீறப்படுவதாகவும் கூறியது.வர்கீஸ் கே ஜார்ஜ் தனது ‘ஓபன் எம்ப்ரேஸ்’ புத்தகத்தில், “இந்தியன் என்றால் இந்து, இந்து என்றால் இந்தியன்,” என்ற கூற்றை ஏற்றுக்கொள்ள இந்திய அமெரிக்க சமூகம் தயாராக இருப்பதாக எழுதினார்.சாதியைக் குறிப்பிடாத , பான்-இந்து (இந்தியாவின் இதுக்கள்) அடையாளத்தை ஊக்குவிக்கும் ஆளும் இந்திய அரசின் நிகழ்ச்சி நிரலுடன் இந்த கருத்து எளிதாக ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளது.புலம்பெயர்ந்தோரை “தந்திரோபாய சொத்து” என்று கூறிய பிரதமர் நரேந்திர மோதிக்கு ஆதரவாக உள்ள பல இந்திய-அமெரிக்க அமைப்புகளில் HAF ஒன்றாகும்.இந்தியாவில் பாஜகவின் எழுச்சியுடன், தங்கள் கருத்துக்களை வற்புறுத்தவும், அமெரிக்காவின் நடப்பு நிலையில் மாற்றங்களை தடுக்க சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அதிக அதிகாரம் பெற்றதாக அத்தகைய குழுக்கள் உணர்ந்தன என்று பூபதி கூறினார்.உலகளாவிய சிவில் மற்றும் மனித உரிமைகளில், சாதி சமத்துவம், முக்கியமான மற்றும் அவசரமாக கொண்டுவரப்படவேண்டிய ஒன்றாகும் என்று சௌந்தரராஜன் கூறினார். ” தங்களை எவ்வாறு அனைவரும் அணுகக்கூடிய இடங்களாக மாற்றுவது என்பது குறித்து சாதியால் ஒடுக்கப்பட்டவர்கள் நிறுவனங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்,”என்கிறார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *