மேட்டூர் அனல் மின் நிலையத்தில் உற்பத்தி பாதிப்பு நிலக்கரி பற்றாக்குறையா..? தொழிலாளர்கள் குற்றச்சாட்டு..!!

மேட்டூர் 840 மெகாவாட் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 3 அலகுகளில் 630 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூரில் தலா 210 மெகாவாட் வீதம் நான்கு அலகுகள் கொண்ட 840 மெகாவாட் அனல் மின் நிலையமும், 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட மற்றொரு அனல் மின் நிலையமும் இயங்கி வருகிறது. இதன் மூலமாக நாளொன்றுக்கு 1,440 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய வேண்டும். இதற்காக மேட்டூர் அனல் மின் நிலையத்திற்கு நாளொன்றுக்கு மத்திய நிலக்கரி தொகுப்பில் இருந்து சுமார் 12 ஆயிரம் டன் அளவுக்கு ரயில் மூலம் நிலக்கரி வரவேண்டும்.

ஆனால், மத்திய அரசிடம் போதுமான அளவுக்கு நிலக்கரி கையிருப்பு இருந்தும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நிலக்கரியை அனுப்பாமல் காலம் தாழ்த்தி வருவதாக அனல்மின் நிலைய தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் 840 மெகாவாட் அனல் மின் நிலையத்திற்கு 12,000 டன் நிலக்கரி 600 மெகாவாட் அனல் மின் நிலையத்திற்கு 14 ஆயிரம் டன் நிலக்கரி நாளொன்றுக்கு தேவைப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது மேட்டூர் அனல் மின் நிலையத்தில் சுமார் 7 ஆயிரம் டன் அளவுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளதால் 840 மெகாவாட் அனல் மின் நிலையத்தில் உள்ள 2,3,4 ஆகிய 3 அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்த 630 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதலாவது அலகில் மட்டும் 210 மெகாவாட்டிற்கு பதிலாக 160 மெகாவாட் அளவுக்கு மட்டுமே மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

அதேபோன்று 600 மெகாவாட் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 340 மெகாவாட் அளவுக்கு மட்டுமே மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதுபோன்ற நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மேட்டூர் அனல் மின் நிலையத்தில் உள்ள அலகுகள் அவ்வப்போது நிறுத்தி இயக்குவதால் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பை அனல் மின் நிலைய நிர்வாகம் சந்தித்து வருவதால் அனல் மின்நிலையம் மூடக்கூடிய நிலையை மத்திய அரசு உருவாக்கி வருவதாக தொழிற்சங்க நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *