
சென்னை: சென்னை மெரினா நொச்சிக்குப்பம் பகுதி மீனவ மக்கள் கடும் வெயிலிலும் சாலையின் நடுவில் படகுகள் மற்றும் ஐஸ் பெட்டிகள் போன்றவற்றை வைத்து சுமார் 200 க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை மீன் கடைகள் ஆக்கிரமித்து உள்ளதாகவும், ஐஸ் பெட்டிகள், மீன் வாங்குவோரின் வாகனங்கள் சாலை ஓரம் நிறுத்தப்படுவதாகவும் கூறி சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து பொதுநல வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
வழக்கு கடந்த வாரம் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பி.பி.பாலாஜி ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது, லூப் சாலையில் மேற்கு பகுதியில் 25 சதவீதம் சாலையை ஆக்கிரமித்து நடைபாதையில் சிறு ஓட்டல்கள் செயல்படுகின்றன. பொதுசாலைகளை ஆக்கிரமிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது. இதில் எந்த சமரசமும் செய்ய முடியாது. லூப் சாலையின் மேற்கு பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிற 18-ந்தேதிக்குள் மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.மெரினா லூப் சாலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த மீன் கடைகள் மற்றும் உணவகங்களை கடந்த வாரம் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினார்கள்.
கடைகள் அகற்றப்படும் தகவலை அறிந்து நொச்சிக்குப்பம் பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் அப்போதே சாலையில் திரண்டனர்.அப்போது, மீன்கடைகள் மற்றும் சாலையோர உணவகங்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீன்களை சாலையில் கொட்டி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் சமாதானம் ஆகவில்லை.சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆனாலும், மாநகராட்சி அதிகாரிகள் 3 பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் சாலையில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினார்கள். தொடர்ந்து இன்று நொச்சிகுப்பம் பகுதி மக்கள் சாலையின் நடுவில் ஐஸ் பெட்டிகள்,மரக்கட்டைகள், படகுகளை குறுக்கே வைத்தும், மீன்களை சாலையில் கொட்டியும் சாலை மறியலில் சுமார் 200 க்கும் மேற்பட்ட மீனவமக்கள் வெயிலில் அமர்ந்து ஈடுபட்டனர்.
மேலும் கருப்புக் கொடி கட்டி தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர்.மேலும் இந்த பகுதி முழுவதும் ஒரு காலத்தில் நொச்சிக்கொடி இருந்ததாகவும் போகப் போக அதை மீனவ மக்கள் அகற்றிவிட்டு இங்கு வாழ்ந்து வந்ததாகவும் கடந்த 8 தலைமுறைகளாக இந்த பகுதியில் வசித்து வருவதாகவும் இதன் காரணமாகவே இப்பகுதியை நொச்சிக் குப்பம் என தெரிவித்தார்கள்.
தற்போது இந்த பகுதி நிலம் என்று கூறி அகற்றுவது முற்றிலும் முரணானது என தெரிவிக்கிறார்கள்.தொடர்ந்து எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் காலையில் இரண்டு மணி நேரம் மாலை 2 மணி நேரம் இந்த சாலையை பொது போக்குவரத்தாக பயன்படுத்தலாம். இல்லையெனில் முற்றிலும் பயன்படுத்த முடியாது எனவும், சென்னை மெரினா முழுவதும் மீன் கடைகளை நாங்கள் போடுவோம் எனவும் கூறுகிறார்கள்.
மேலும், மாநகராட்சியில் சாலைக்கு வராமல் கடை அமைத்துக்கொள்ள தெரிவிக்கின்றனர். ஆனால், அதற்கான நெறிமுறைகளை வகுத்து தடுப்பு அமைத்து கொடுக்க முன்வராமல் உள்ளனர். அதனை சரி செய்ய வேண்டும் என்று பேசினார்கள்.