மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்ததில் 15 பேருக்கு கண் பார்வை பாதிப்பு- 62 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ந் தேதி இரவு விற்கப்பட்ட விஷச்சாராயம் குடித்ததில் 14 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 51 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 6 பேரும், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் 1ம், மரக்காணம் அரசு மருத்துவமனையில் 4 பேரும் என மொத்தம் 62 பேர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 15 பேருக்கு கண்பார்வை பாதிப்பு மற்றும் சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் செயலிழந்து பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு டயாலிசிஸ் எனப்படும் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை முறைகள் 2 முறை அளிக்கப்பட்ட நிலையிலும் அவர்களது உடல் உறுப்புகள் செயலிழந்து வருவதாக மருத்துவகள் தெரிவிக்கின்றன.மேலும் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள அதிதீவிர சிகிச்சை பிரிவில் 4 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் 4 பேரும் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு மருத்துவர்கள் குழுவினர் கண்காணித்து வருகின்றனர். மற்ற அனைவரும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலருக்கு கண், சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களது குடும்பத்தினர் அச்சம் அடைந்துள்ளனர். எந்த நேரத்திலும் அவர்கள் உயிரிழக்கக்கூடுமோ? என்ற அச்சத்தில் குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளனர். எனவே உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அதற்கேற்ப உரிய சிகிச்சைகளை அளிக்குமாறும், அல்லது மேல்சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்குமாறும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் மேலும் கூறுகையில், எங்கள் பகுதியில் சாராயம் விற்பனை செய்தது பற்றி பலமுறை மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் செய்தோம். அப்போதே காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோன்ற மரணங்கள் ஏற்பட்டிருக்காது. தினமும் முழு நேரமும் சாராயம் விற்றனர். அவர்களிடம் லஞ்சம் பெற்று கொண்டு கண்டுகொள்ளவே இல்லை என்று பதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *