மெடிக்கலில் மாத்திரை வாங்கி கருவை கலைத்த கர்ப்பிணி பலி: கடைக்கு சீல்; ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சிகர தகவல்!

மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்தகங்களில் மாத்திரைகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.திருச்செங்கோட்டில் உள்ள மல்லசமுத்திரம் வட்டாரம் ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரம்யா (29), பிரகாஷ் தம்பதி. கர்ப்பிணியான ரம்யாவுக்கு அண்மையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் சிகிச்சை பலனின்றி ரம்யா உயிரிழந்திருக்கிறார்.இது தொடர்பாக தகவல் அறிந்த மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரேயா.பி.சிங் குடும்ப நலத்துறை துணை இயக்குநர் மருத்துவர் வளர்மதி தலைமையில் அரசு மருத்துவர்கள், மருத்துவ அலுவலர்கள், காவல்துறை, வருவாய்த்துறை அலுவலர்களை கொண்ட குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

அதனடிப்படையில், உயிரிழந்த கர்ப்பிணியான ரம்யா வசித்த பகுதியில் உள்ள மருதம் என்ற மருந்தகத்தில் மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் கருக்கலைப்பு செய்ய மாத்திரை வாங்கி சாப்பிட்டிருக்கிறார்.இதையடுத்து மாத்திரை விற்ற மருதம் மருந்து கடையை ஆய்வு செய்ய விசாரணை குழுவினர் சென்றபோது கடை பூட்டியிருந்ததால் உரிமையாளரை தொடர்பு கொண்டிருக்கிறார்கள். அப்போது மருந்தகத்திற்கு முன் இருந்த பெட்டிகளில் பயன்படுத்தப்பட்ட காலி ஊசிகள் சிரஞ்சுகளை கண்டிருக்கிறார்கள்.நீண்ட நேரமாகியும் கடையின் உரிமையாளர் வராததால் கடந்த மார்ச் 31ம் தேதியன்று மருதம் மருந்தகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. ஆனால் மறுநாளான மார்ச் 31ம் தேதி இரவு 10.30 மணியளவில் சம்மந்தப்பட்ட மருந்தகத்தின் மேற்கூரையை பிரித்து மர்ம நபர்கள் சிலர் உள்ளே இருந்த மாத்திரை, மருந்துகளை எடுத்துச் சென்றதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

சீல் வைக்கப்பட்ட கடையில் இருந்து மருந்துகள் எடுத்துச் செல்லப்பட்டதால் உரிமையாளர் முத்துசாமியை விசாரிக்குமாறு மல்லசமுத்திரம் வட்டார அலுவலர் மருத்துவர் கிருஷ்ணன் உத்தரவிட்டதன் பேரில் போலிஸார் வழக்குப்பதிந்து நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறார்கள்.இந்த நிலையில், “தேவையற்ற கர்ப்பத்தை, கருக்கலைப்பு செய்து கொள்ள விரும்பும் கர்ப்பிணிகள், பயிற்சி பெறாத மருத்துவர்களிடமோ, அங்கீகாரம் பெறாத மருத்துவமனைகளிலோ கருக்கலைப்பு செய்ய மேற்கொள்ள வேண்டாம். மேலும் மருந்தகங்களில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனை செய்யக்கூடாத மருந்து, மாத்திரைகளை விற்பவர்கள் மீதும், போலி மருத்துவர்கள் மீதும் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.” என நாமக்கல் மாவட்ட ஆட்சித்லைவர் எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *