மூளைச்சாவு அடைந்தவரின் இதயம் வேலூரில் இருந்து சென்னைக்கு 95 நிமிடங்களில் கொண்டு வந்த ஓட்டுநருக்கு பலரும் பாராட்டு..!

வேலூர்மாவட்டம்,பேர்ணாம்பட்டு அருகே வாணியம்பாடி மதனாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி தினகரன் (21). இவர் பேர்ணாம்பட்டு நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்தார்.அப்போது அவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (சி.எம்.சி) சிகிச்சைக்காக சேர்த்தனர்.அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டது. எனினும் இன்று தினகரனுக்கு மூளைச் சாவு ஏற்பட்டது. இதனால் அவரது இரண்டு சிறுநீரகங்கள் , கல்லீரல், இதயம் ஆகிய உறுப்புகளை தானமாக கொடுக்குமாறு தினகரனின் பெற்றோரிடம் மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

மூளைச்சாவு அடைந்த நிலையில் இந்த உறுப்புகளை யாருக்கேனும் கொடுத்தால் அவர்கள் மூலம் உங்கள் மகன் வாழ்வார். இதனால் மற்றவர்களுக்கு வாழ்வு கிடைக்கும். உங்கள் மகன் இறந்து இத்தனை பேருக்கு வாழ்வு கொடுக்கிறார் என மருத்துவர்கள் புரிய வைத்தனர். இதையடுத்து எங்கள் மகனை மற்றவர்கள் மூலம் பார்க்க விரும்புகிறோம் என கூறிய பெற்றோர்கள் அதற்கான விண்ணப்பத்தில் கையெழுத்திட்டனர்.இதையடுத்து அவரது இரண்டு சிறுநீரகங்கள் , கல்லீரல், கண்கல் ஆகியவை சி,எம்.சி மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது. இதையடுத்து இதயத்தை சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆயத்தப்படுத்தப்பட்டது. இதற்காக காவல்துறையிடம் பேசப்பட்டது.வேலூரிலிருந்து சென்னை வருவதற்கு குறைந்தபட்சம் 3 மணி நேரம் ஆகும். ஆனால் காவல் துறை ஒத்துழைப்புடன் பிற்பகல் 3 மணிக்கு இதயத்தை எடுத்துக் கொண்டு ஆம்புலன்ஸ் புறப்பட்டது. சரியாக 95 நிமிடங்களில் இதயம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையை அடைந்தது. அனைத்து இடங்களிலும் போக்குவரத்தை போலீஸார் ஒழுங்குப்படுத்தினர்.அது போல் அண்ணா ஆர்ச் வரும் போதும் போக்குவரத்தை சீர்படுத்தி ஆம்புலன்ஸ் வாகனம் கடக்க வழியேற்படுத்திக் கொடுத்தனர். அது போல் அப்பல்லோ மருத்துவமனையில் இதயமாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக ஏற்பாடுகள் தயார் நிலையில் இருந்தது. தற்போது தினகரனின் இதயம் நோயாளிக்கு பொருத்தும் பணிகள் நடைபெறுகிறது. 95 நிமிடங்களில் இதயத்தை எடுத்து வந்த ஆம்புலன்ஸ் டிரைவர் வேல்முருகனுக்கு பாராட்டுகள் குவிகின்றன. இது போல் உறுப்புகளை ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லும் நிகழ்வுக்கு க்ரீன் காரிடார் என்பதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *