
மெய்ன்புரி: உத்தரபிரதேச மாநிலம் நக்லா கான்கை கிராமத்தில் வசித்தவர் சிவானந்தம் (வயது 35). இவரது வீட்டிற்கு நேற்று உறவினர்கள் வந்துள்ளனர். அப்போது அவர்களுக்கு சிவானந்தத்தின் மனைவி மூலிகை டீ போட்டு கொடுத்ததாக கூறப்படுகிறது. அதை சிவானந்தம், அவரது மகன்கள் மற்றும் மாமனார், உறவினர் அருந்தி உள்ளனர். மூலிகை டீ அருந்திய சிறிது நேரத்தில் அவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அப்போது அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், சிவானந்தம் உள்பட 5 பேரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து முதல்கட்ட விசாரணையில் சிவானந்தத்தின் மனைவி, டீ தயாரித்த மூலிகை செடி விஷத்தன்மை கொண்டதாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக பல்வேறு கோணத்திலும் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.