மூலப்பொருள்களின் விலை உயர்வால் 12 நாள்கள் தீப்பெட்டி ஆலைகள் மூட முடிவு என் தகவல்.!அச்சத்தில் தொழிலாளர்கள்!

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், திருவேங்கடம், வேலூர் மாவட்டம் குடியாத்தம், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் தீப்பெட்டி உற்பத்தி நடந்து வருகிறது. இதில் 80% தீப்பெட்டி கோவில்பட்டியில் உற்பத்தி செய்யப்படுகிறது.தமிழகம் முழுவதும் 50 முழு இயந்திரத் தீப்பெட்டி ஆலைகளும், 320 பகுதி இயந்திரத் தீப்பெட்டித் ஆலைகளும், 2,000-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி பேக்கிங் சார்பு ஆலைகளும் இயங்கி வருகின்றன. நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 90% பெண்களே பணிபுரிந்து வருகின்றனர்.தீப்பெட்டி உற்பத்திக்குத் தேவையான முக்கிய மூலப் பொருள்களான பாஸ்பரஸ், குளோரைட், மெழுகு, அட்டை, பேப்பர் என அனைத்துப் பொருள்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், உற்பத்தியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் ரூ.1-க்கு விற்பனை செய்யப்பட்டுவந்த ஒரு தீப்பெட்டியின் விலையை 17 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த நவம்பர் மாதம் ரூ.2-ஆக உயர்த்தினர். இருப்பினும், கடந்த மூன்று மாதங்களில் எட்டு முறை, மூலப்பொருள்களின் விலை 40% வரை ஏற்றப்பட்டுள்ளது. இதனால் 600 தீப்பெட்டிகள் கொண்ட ஒரு பண்டலின் விலையை ரூ.300-ல் இருந்து ரூ.350-ஆக ஏப்ரல் 1-ம் தேதி முதல் உயர்த்துவதாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் அறிவித்தனர். ஆனால், வியாபாரிகள் இந்த விலையேற்றத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது.ஆர்டர்கள் பாதியாகக் குறைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் சுமார் ரூ.80 கோடி மதிப்பிலான தீப்பெட்டிகள் தேக்கம் அடைந்துள்ளன. இந்த நிலையில், உற்பத்தித் தேக்கத்தினாலும், விற்பனை வாய்ப்பு இல்லாததாலும் வரும் 6-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் தீப்பெட்டி ஆலைகளை மூடுவதாக உற்பத்தியாளர்கள் முடிவெடுத்துள்ளனர். இதனால், 5 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பினை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியளர் சங்கத்தின் செயலாளரான சேதுரத்தினத்திடம் பேசினோம். “தீப்பெட்டி உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருள்களின் விலை அதிகரித்துள்ளது என்பதனை வியாபாரிகள் அறிந்திருந்தாலும், தீப்பெட்டி பண்டலுக்கான விலை உயர்வினை ஏற்க மறுக்கிறார்கள்.தற்போது தீப்பெட்டி கை இருப்பும் அதிகமாக உள்ளது. உற்பத்தியைத் தொடர்ந்து நடத்திட வேண்டும் எனில், பணம் தேவை.

பழைய விலைக்கே தீப்பெட்டி பண்டலைக் கொடுக்க முடியாது என்பதை வியாபாரிகளுக்கு உணர்த்திடவே இந்த உற்பத்தி நிறுத்தம். எங்களின் நிலைமை அறிந்து தீப்பெட்டி விலை உயர்வினை வியாபாரிகள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.சீனாவில் இருந்து தற்போது அனுமதி இல்லாத லைட்டர்ஸ் விற்பனைக்கு வருகிறது. இந்த லைட்டர்களால் 30% வரை விற்பனை பாதிக்கிறது. ஒவ்வொரு பொருள் உற்பத்தியிலும் 72 பைசா, உற்பத்தி நிறுவனத்திற்குக் கிடைக்கிறது. ஆனால், எங்களுக்கு 42 பைசா மட்டுமே கிடைக்கிறது. தீப்பெட்டி உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருள்களை தமிழக அரசின் சிட்கோ மூலம் மானிய விலையில் வழங்கிட வேண்டும் என்ற எங்களின் நீண்ட காலக் கோரிக்கையை முந்தைய அதிமுக அரசும் கண்டுகொள்ளவில்லை.தற்போதைய திமுக அரசு பொறுப்பேற்றதும் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட அமைச்சரான கீதாஜீவன், மக்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோருக்கு மனு அளித்தும் எந்தப் பலனும் இல்லை. இதே நிலை நீடித்தால் தீப்பெட்டிகளை நிரந்தரமாக மூடுவதைத் தவிர வேறு வழியில்லை” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *