
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து, இந்த மரணம் குறித்து விசாரிக்க அப்போதைய அ.தி.மு.க ஆட்சியில் நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால், கடந்த 2019-ல் உச்ச நீதிமன்றம் இதற்கு தடை விதித்ததையடுத்து இந்த விசாரணை அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது 3 ஆண்டுகளுக்குப் பிறகு இது தொடர்பான விசாரணையை ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும் தொடங்கியது.இதில் முதற்கட்டமாக ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்துவந்த அப்போலோ மருத்துவர்களிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தியது. பின்னர் இரண்டாம் கட்ட விசாரணைக்காக, ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி ஆகியோருக்கு ஆறுமுகசாமி ஆணையம் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தது.முன்னதாக பலமுறை இதுதொடர்பாக விசாரிக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு சம்மன் அனுப்பட்டிருந்தும் ஒருமுறைகூட ஆஜராகாத ஓ.பன்னீர்செல்வம், விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராகி, “ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை வழங்கப்பட்டது ? எந்தெந்த மருத்துவர்கள் சிகிச்சை வழங்கினார்கள் என்ற விவரம் எனக்குத் தெரியாது” என வாக்குமூலம் அளித்துள்ளார்.இந்த விசாரணையில், “2016 செப்டம்பர் 22 -ம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்ற விவரமும் எனக்குத் தெரியாது. சொந்த ஊரில் இருந்த போது நள்ளிரவு நேரத்தில் என் உதவியாளர் மூலம் தெரிந்து கொண்டேன். அடுத்த நாள் பிற்பகலில் அப்போலோ மருத்துவமனை சென்ற போது அங்கிருந்த தலைமைச் செயலாளரிடம் விவரங்களைக் கேட்டறிந்தேன்.ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய தினம் மெட்ரோ ரயில் நிகழ்வில் கலந்து கொண்டபோது ஜெயலலிதாவைப் பார்த்தேன். அதற்குப் பின்னர் அவரை பார்க்கவில்லை. ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அதிகமாக இருக்கிறது என்பதைத் தவிர அவருக்கு இருக்கும் வேறு உடல் உபாதைகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணைய கோப்பில் துணை முதலமைச்சர் என்ற அடிப்படையில் நானும் கையெழுத்திட்டுள்ளேன்” என ஓ.பன்னீர்செல்வம் ஆறுமுகசாமி ஆணையத்திடம் விளக்கமளித்துள்ளார்.

மேலும், விசாரணை ஆணையம் அமைக்கக் கோரியது யார் ? ஆணையம் அமைக்க முடிவு செய்தது யார் என ஆறுமுகசாமி ஆணையம் எழுப்பிய கேள்விக்கு, “பொதுமக்களின் எண்ணத்தின் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டது” என ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார்காலை 11.30 மணிக்கு தொடங்கிய விசாரணை 2 மணிநேரத்துக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது நடைபெற்ற காவிரி கூட்டம் தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என்றும், அறிக்கை வந்த பிறகு தான் தெரிந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், அந்த கூட்டத்தில் பங்கேற்ற அப்போதைய தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவிடம் கூட்டம் தொடர்பாக கேட்ட போது, முதலமைச்சர் தனக்கு டிக்ட்டேட் செய்ததாக தன்னிடம் தெரிவித்ததாக கூறினார்.“மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்பு, அவரின் உடல் நலன் குறித்த தகவல்களை அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மூலம் தெரிந்துகொள்வேன்” என்றார்.காவிரி கூட்டத்திற்கு பிறகு ஜெயலலிதாவுக்கு இதய பிரச்னை ஏற்பட்டு உடல் நலனில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது தனக்கு தெரியாது என்றும், ஆனால் அவர் இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன் நான் முதல்வரின் உடல்நிலை குறித்து விஜயபாஸ்கரிடம் நான் கேட்டதற்கு, `இதய பிரச்னை இருந்ததை கூறியாதாக’ ஓபிஎஸ் ஆணையத்தில் தெரிவித்தார்.

ஜெயலலிதாவிற்கு இதய பாதிப்பு ஏற்பட்ட போது என்ன சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்றும், யார் முடிவு செய்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தது தொடர்பாகவும் தனக்கு எதுவும் தெரியாது என்றார்.இரண்டு மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடைபெற்ற நிலையில் தற்போது உணவு இடை வேளைக்காக பன்னீர் செல்வம் வெளியே வந்திருக்கிறார். மதியம் 3 மணிக்கு மேல் மீண்டும் விசாரணை நடைபெறும்!