
சென்னை: முஸ்லீம்களுக்கு எதிராக பாஜக பின்னும் சதிவலையில் இஸ்லாமியர்கள் விழுந்துவிடக் கூடாது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.மேலும் முஸ்லீம்களுக்கு ஆதரவாக எப்போதும் விசிக குரல் கொடுக்கும் என அவர் உறுதியளித்துள்ளார்.சென்னையில் விசிகவின் சார்பு அணியான இஸ்லாமிய ஜனநாயக பேரவை சார்பில் நடைபெற்ற இஃப்தார் விருந்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார்.மேலும் பேசிய அவர் இந்துத்துவா சக்திகள் இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்துக்களை தூண்டி விட்டு வருவதாகவும் விசிக உட்பட ஜனநாயக சக்திகள் அனைத்தும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக துணை நிற்கும் எனவும் கூறினார். அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தும் தகுதி பாஜகவினருக்கு கிடையாது என்றும் பாஜகவின் கொள்கைகளுக்கு எதிரானவர் அம்பேத்கர் எனவும் திருமாவளவன் தெரிவித்தார்.சென்னை கோயம்பேட்டில் அம்பேத்கர் சிலை அருகே நடந்த நிகழ்வு பாஜகவின் திட்டமிட்ட சதி என்றும் எந்த சூழலிலும் பாஜகவுக்கு பதிலடி கொடுக்கவும் அதனை எதிர்த்து நிற்கவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தயாராக இருப்பதாகவும் திருமா கூறினார். அம்பேத்கரின் புத்தகங்களை படித்துப் பார்த்திருந்தால் பாஜகவினர் அவருக்கு மாலை அணிவிக்கவே வந்திருக்கமாட்டார்கள் எனத் தெரிவித்தார்.பாஜகவின் சதி வலையில் விழுந்துவிடாமல் இஸ்லாமியர்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் தற்போதைய சூழலில் எந்த எதிர்வினையும் காட்ட வேண்டாம் எனவும் திருமாவளவன் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற இஃப்தார் எனும் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் 5 நாட்கள் தாம் கடைபிடித்து வந்த நோன்பை நிறைவு செய்தார்.18-வது ஆண்டாக தொடர்ந்து திருமாவளவன் இந்தாண்டு நோன்பு வைத்தது இங்கு கவனிக்கத்தக்கது. ஆண்டுதோறும் வழக்கமாக 3 நாட்கள் வரை நோன்பு நோற்ற அவர் இந்தாண்டு 5 நாட்கள் வரை நோன்பு நோற்று பகலில் உண்ணாமல், பருகாமல் பசித்திருந்து நோன்பை நிறைவு செய்தார்.