முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது..! அமைச்சரின் மகன் ஜெயவர்தன் குற்றச்சாட்டு.!

சென்னை,பெருநகர சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளுக்கு கவுன்சிலர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஓட்டுப்பதிவு கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் சில மையங்களில் கள்ள ஓட்டு பிரச்சினை எழுந்தது. இதனால் தி.மு.க.- அ.தி.மு.க.வினர் இடையே பிரச்சினை எழுந்தது.ராயபுரம் மண்டலத்துக்குட்பட்ட 49-வது வார்டு பழைய வண்ணாரப்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவில் உள்ள காமராஜர் மெட்ரிக்குலேசன் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் தி.மு.க.வினர் கள்ள ஓட்டு போடுவதாக, அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமாருக்கு தகவல் கிடைத்தது.உடனடியாக அங்கு சென்ற ஜெயக்குமார் மற்றும் அதிமுக தொண்டர்கள், தி.மு.க. தொண்டர் ஒருவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. ஜெயக்குமாரும் தனது முகநூல் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவேற்றம் செய்திருந்தார்.இந்நிலையில் பேசிக்கொண்டிருக்கும்போதே ஜெயக்குமார் முன்னிலையில் சிலர் திமுக பிரமுகரை தாக்கும் காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. இதன் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட திமுக பிரமுகரை அதிமுகவினர் சட்டையைக் கழற்றி அழைத்து சென்றுள்ளனர். இதனையடுத்து திமுக பிரமுகர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதேபோல ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் மீதும் புகார் கொடுக்கப்பட்டது.இந்நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் அவரது இல்லத்தில் வைத்து, 40 பேர் அடங்கிய போலீசார் இன்று இரவு கைது செய்தனர். பின்னர் அவரை, போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்றனர்.

இந்நிலையில் வீடு புகுந்து தனது தந்தையை போலீசார் பலவந்தமாக இழுத்து சென்றனர் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் கைது பற்றி எந்த விவரமும் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என்று ஜெயவர்தன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *