முத்து ராமலிங்க தேவர் ஜெயந்தி விழா: மதுரையில் பல இடங்களில் இன்று போக்குவரத்து மாற்றம்; 2000ம் மேற்பட்ட காவல்துறை பாதுகாப்பு.!

மதுரை: முத்து ராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, மதுரை மாநகரில் பல இடங்களில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, காவல்துறையினர் வெளியிட்ட அறிக்கையில்: இன்று லாரிகள் மற்றும் கனகர வாகனங்கள் காலை 6 மணிமுதல் இரவு 10.30 மணி வரை நகருக்குள் கோரிப்பாளையம் தேவர் சிலை நோக்கி நுழைய தடை செய்யப்படுகிறது. விழாவிற்கு வரும் வாகனங்களை தவிர, மற்ற வாகனங்கள் தேவர் சிலை நோக்கிவரும் சாலைகளில் செல்வதற்கு அனுமதி இல்லை.நத்தம் ரோடு, அழகர்கோவில் ரோடு ஆகிய பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் பாண்டியன் ஓட்டல் சந்திப்பில் திரும்பி மாற்று பாதையாக கக்கன்சிலை, ராஜா முத்தையா மன்றம், கே.கே.நகர், ஆவின் சந்திப்பு, அண்ணாநகர் மெயின் ரோடு, பி.டி.ஆர். பாலம், காமராஜர் சாலை வழியாக செல்லவேண்டும்.மாட்டுத்தாவணி, ஆவின் சந்திப்பு ஆகிய பகுதிகளிலிருந்து நத்தம் ரோட்டிற்கு வரும் வாகனங்கள், ராஜாமுத்தையா மன்றம், அவுட் போஸ்ட், பாண்டியன் ஓட்டல், தாமரைத்தொட்டி, புது நத்தம் ரோடு வழியாக செல்லவேண்டும்.வடக்குவெளி வீதியிலிருந்து யானைக்கல், புதுப்பாலம் வரும் வாகனங்கள், பாலம் ஸ்டேசன் ரோடு, எம்.எம். லாட்ஜ் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி கான்சாபுரம் ரோடு, அரசன் ஸ்வீட்ஸ், பெரியார் மாளிகை வழியாக செல்ல வேண்டும்.இதுபோல், மேலமடைபகுதியிலிருந்து கோரிப்பாளையம் நோக்கி நகருக்குள் வரும் வாகனங்கள், ஆவின் சந்திப்பிலிருந்து குருவிக்காரன் சாலை வழியாக நகருக்குள் செல்லவேண்டும்.குறிப்பாக, தேவர் ஜெயந்தி விழாவிற்காக பசும்பொன் செல்லக்கூடிய பிறமாவட்ட வாகனங்கள், நகருக்குள் செல்ல காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட வாகனங்களை தவிர இதர வாகனங்கள் நகருக்குள் வராமல் சுற்றுச்சாலை வழியாகச் செல்லவேண்டும்.தேவர் ஜெயந்தி விழாவினை முன்னிட்டு, வியாபாரிகள், வாகன ஓட்டுனர்கள், பொதுமக்களின் நலன் கருதி இதில் குறிப்பிட்டுள்ள மாற்றுப் பாதைகளை தற்காலிகமாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எந்த விதமான விதிமீறலிலும் ஈடுபடாமல் முறையாக சாலைகளில் பயணிக்க பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *