முதல் முதலாக கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் நடத்தும் கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா; வெகுசிறப்பாக நடைபெற அனைத்து முன்னேற்பாடுகள் குறித்து அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.!

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோவில் சித்திரைப்பெருவிழா நடைபெறுவது குறித்து
அனைத்துதுறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஆட்சியர் திரு.ஷ்ரவன்குமார் தலைமையில் மாவட்ட காவல் கர்காணிப்பாளர் திரு.என்.மோகன்ராஜ் முன்னிலையில் நேற்று (05.04.2023) மாவட்ட ஆட்சியர் கூடாரங்கில் நடைபெற்றது. கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோவில் எதிர்வரும் 18.04.2023 முதல்
சித்திரைப்பெருவிழா உற்சவம் தொடங்கி 05.05.2023 வரை வெகுசிறப்பாக
நடைபெறவுள்ளது. இத்திருவிழாவிற்கு இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும்,
வெளிநாடுகளிலிருந்தும் பல ஆயிரகணக்கில் பக்தர்கள்/திருநங்கைகள் வருகை புரிவது வழக்கம் . இந்த கூத்தாண்டவர் திருவிழா (சித்திரைப்பெருவிழா) மகாபாரதபோர்
18 நாட்கள் நடைபெற்றது போல் கூவாகம் கிராமத்தில் (அரவான்) கூத்தாண்டவர் திருவிழா
ஒவ்வொரு ஆண்டும் (சித்ராபௌர்ணமி) சித்திரை மாதத்தில் 18 நாட்கள் வெகு
விமரிசையாக நடைபெற்று வருகிறது. கொடியேற்றத்துடன் தொடங்கும் இவ்விழா தர்மர்
பட்டாபிஷேகத்துடன் நிறைவடைகிறது. இதில் பகதர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவதற்கும், திருவிழா தொடர்பான மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் நடவடிக்கைகள் குறித்து ஒருங்கிணப்பு குழு கூட்டம் அனைத்துத்துறை தலைவர்களுடன் நேற்று நடைபெற்றது.

திருவிழா நடைபெறும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், தடுப்பு கட்டைகள்
ஏற்படுத்துதல், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் தற்காலிக நிறுத்துமிடம்
ஏற்படுத்துதல், போதியளவில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவும், கூடுதல்
காவலர்களை நியமித்திடவும் காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது. திருவிழாவில்
கலந்து கொள்வதற்கு போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்து வசதி ஏற்படுத்திடவும்,
ஊரக வளர்ச்சி துறை மூலம் போதிய அளவில் குடிநீர் வசதி ஏற்பாடு செய்தல், பொது
சுகாதார பணிகள் மேற்கொள்ளுதல், தற்காலிக கழிவறை வசதி ஏற்படுத்திடவும்,
நெடுஞ்சாலை துறை மூலம் சாலை வசதி ஏற்படுத்திடவும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும் மருத்துவ துறையின் மூலமாக சிறப்பு மருத்துவ முகாம்கள், அவசர ஊர்தி
ஏற்படுத்திடவும், மின்சார வாரியத்தின் மூலமாக தடையற்ற மின்சாரம் வழங்கிடவும், போதிய
இடங்களில் மின் வசதி ஏற்படுத்திடவும், பொதுப்பணித்துறை மூலமாக திருத்தேர்
சீரமைத்தல் தேர்ரோடும் பாதைகளை ஆய்வு மேற்கொள்ளவும், தீயணைப்புத் துறை மூலமாக
போதியளவில் தீயணைப்பு வாகனங்களை தயார் நிலையில் வைத்திடவும்,
தொலைத்தொடர்பு துறை மூலமாக தொலைத்தொடர்பு வசதிகளை ஏற்படுத்திடவும்
அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கூத்தாண்டவர் திருக்கோவில் திருவிழா முதன்முதலாக கள்ளக்குறிச்சி
மாவட்ட நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறை இணைந்து நடத்திடவுள்ளதால்
தொடர்புடைய அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை வெகுசிறப்பாக மேற்கொண்டு
பக்தர்கள் மற்றும் திருநங்கைகள் திருவிழாவில் பங்கேற்பதற்கான அனைத்து வசதிகளும்
செய்திட வேண்டுமென ஆட்சியர் அறிவுறுத்தினர்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நா.சத்தியநாராயணன், இந்து சமய
அறநிலைய துறை உதவி ஆணையர் க.சிவாகரன், திருக்கோவிலூர் கோட்டாட்சியர்
ஜெ.யோகஜோதி, துணை இயக்குநர் சுகாதார பணிகள் சு.ராஜா, அனைத்துத்
துறை அலுவலர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் பணியாளர்கள்
கலந்து கொண்டனர்.

பகுஜன் குரல் மாவட்ட செய்தியாளர் ப.சிவபெருமான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *