
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் வீட்டில் தனிப்பிரிவு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு (22-ம் தேதி) ஒரு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்திருக்கிறது. அதில், பேசிய நபர் ஒருவர் முதல்வரின் வீட்டுக்கு வெடிகுண்டு வைத்திருக்கிறேன். அது இன்னும் சற்று நேரத்தில் வெடிக்கும் என்று கூறிவிட்டு உடனடியாக தொடர்பைத் துண்டித்திருக்கிறார். அதனால் பதற்றம் அடைந்த முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள், அழைப்பு வந்த தொலைபேசி எண்னை கண்டுபிடித்தனர். பின்னர் அந்த எண் எங்கிருந்து அழைக்கப்பட்டிருந்து என்பதையும் காவல் துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி பகுதியில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது என்பதை கண்டுபிடிக்கப்பட்டது பிறகு உள்ளூர் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஆழ்வார்குறிச்சி காவல்துறையினர் நடத்திய விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது, தாட்டான்பட்டி கிராமத்தை சேர்ந்த அந்தோணிராஜ் என்பது தெரியவந்தது. 34 வயதான அவர் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ரயில் நிலையத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார்.அவரிடம் நடத்திய விசாரணையில், அந்தோணி ராஜின் குடும்ப சொத்துப் பிரச்னை தொடர்பாக அவர் தந்தை ஜெபஸ்டியான் என்பவர் இரு மாதங்களுக்கு முன்பு ஆழ்வார்குறிச்சி காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். ஆனால், அந்த மனு தொடர்பாக காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தவில்லை என அந்தோணிராஜ் அதிருப்தியில் இருந்திருக்கிறார்.அதனால் இரவு நேரத்தில் மது குடித்த அவர், தன் குடும்பச் சொத்து வில்லங்கம் தொடர்பாக காவல் துறையினர் உரிய விசாரணை நடத்தாததால் அதிருப்தியடைந்து முதல்வரின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்கிறார். அவரைக் கைதுசெய்த காவல் நிலையத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை சென்னைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தவும் காவல் துறை திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.