“முதல்வருக்கு நன்றி!” நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.!

சென்னை: செய்தியாளர் சந்திப்பின் போது மயக்கம் அடைந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்துள்ளார்.சென்னை திருவொற்றியூரில் உள்ள அண்ணாமலை நகர் பகுதிகளில் வீடுகள் இடிக்கப்படுவதாகத் தகவல் வெளியானது.இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க நேற்றைய தினம் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் சென்றிருந்தார். மேலும், அப்பகுதியில் வீடுகள் இடிக்கப்படுவதற்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் கோஷமிட்டனர்.அங்குப் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்த சீமான், “நம்பிக்கையோடு இருங்கள். வீடுகளை இடித்துவிடுவார்கள் என்று அஞ்ச வேண்டாம். எந்த கட்டிடம் இடித்தாலும் நாம் தமிழர் கட்சி போராட்டம் நடத்தும்” என்று கூறினார். மேலும், குடிநீர், மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ள இடங்களில் உள்ள வீடுகளை திடீரென ஆக்கிரமிப்பு என்று கூறி இடிக்க வருவது ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான் திமுக அரசைக் கடுமையாகச் சாடி பேசினார். சொத்து வரி உயர்வு, அமைச்சர் ராஜகண்ணப்பன் விவகாரம், திமுக கவுண்சிலர்கள் விவகாரம் என பல்வேறு விவகாரங்களில் அவர் திமுக அரசை விமர்சித்தார். மதிய நேரம் என்பதால் அங்கு கடும் வெயில் நிலவியது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே திடீரென சீமான் மயங்கி விழுந்தார்.இதனால் அங்குப் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக சீமானுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மருத்துவச் சிகிச்சைக்குப் பின்னர் அவர் வீடு திரும்பினார். வெயிலில் நின்றுகொண்டே செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தமையாலும், தொடர் அலைச்சல், ஓய்வின்மையாலும் சீமான் சோர்வுற்றதாக அக்கட்சி விளக்கம் அளித்திருந்தது.இந்நிலையில், சீமானிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்துள்ளார். இது தொடர்பாகச் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது உடல்நலம் குறித்து அலைபேசியில் அழைத்து அக்கறையுடன் விசாரித்த தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு எனது நன்றியையும், அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்!” என்று ட்வீட் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *