மீனவப்பெண் வடமாநில இளைஞர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் உயிர் இழந்த பெண்ணுக்கு நீதி கேட்டு உறவினர்கள் போராட்டம்..!

ராமேஸ்வரம் வடகாடு கிராமத்தைச் சேர்ந்த மீனவப் பெண் ஒருவர் கடற்கரையோர காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் நிர்வாணமாக எரித்துக் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தார். அந்தப் பகுதியில் செயல்பட்டுவரும் இறால் பண்ணையில் பணியாற்றிவரும் வடமாநில இளைஞர்கள் ஆறுபேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து சந்திராவைக் கொலை செய்துள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக ஆறு வடமாநில இளைஞர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரணம் வழங்குவதோடு, அரசு வேலை வழங்க வேண்டும். ராமேஸ்வரத்தில் அனுமதியின்றி செயல்படும் இறால் பண்ணைகளை மூடி, அதில் பணியாற்றும் வடமாநிலத்தவர்களை அப்புறப்படுத்தவேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமாநாதபுரம்-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.பின்னர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ சம்பவ இடத்திற்கு வந்து இறந்த மீனவப் பெண்ணின் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தனது சொந்த நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்கினார். தமிழக அரசிடமும் நிவாரணம் வழங்க வலியுறுத்துவதாகவும், அரசு வேலை பெற்று தர முயற்சி செய்வதாகவும் உறுதியளித்தார்.ஆனால் தொடர்ந்து மீனவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஆறு மணிநேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த போராட்டத்தில் போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு போலீஸார் வலியுறுத்தியும், கலைந்து செல்லாமல் போலீஸாரிடம் வாக்குவாதம் செய்தனர்.

ஒருகட்டத்தில் சாலையில் டயர் உள்ளிட்டவற்றைக் தீயிட்டுக் கொளுத்தி கோஷமிட்டதால் பதற்றமான நிலை ஏற்பட்டது. இதையடுத்து எஸ்.பி கார்த்திக் அதிரடிப்படையினருடன் அங்கு சென்று போராட்டக்காரர்களை நோக்கி படையெடுத்ததால் நாலாபுரமும் கலைந்து சென்றனர்.மீனவர்கள் போராட்டத்தால் ராமேஸ்வரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *