
சென்னை: தமிழகத்தில் இருந்து மியான்மர் நாட்டுக்கு தகவல் தொழில் நுட்ப பணிக்காக சென்ற இளைஞர்களுக்கு, அங்கு கூறிய வேலை வழங்கப்படாமல் சட்டவிரோதமான பணிகளை செய்ய வற்புறுத்தி, அதை மறுப்பவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும், அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படியும் பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர் சார்பில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து இந்திய தூதரக உதவியுடன் தமிழக வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நலத்துறை மூலமாக கடந்த மாதம் மியான்மரில் சிக்கி தவித்த 18 பேரை மீட்டு அழைத்து வரப்பட்டனர்.2-வது கட்டமாக தீபாமணி, விக்னேஷ், ராகுல், சிஹரன், முஹிசின், மகேஷ், பாலகோபி, முகமது பைதீன் ஆகிய 8 பேர் நேற்று மியான்மரில் இருந்து மீட்கப்பட்டு தாய்லாந்து வழியாக சென்னை விமான நிலையம் வந்தனர்.சென்னை விமான நிலையத்தில் 8 பேரையும் தமிழக வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் சால்வை அணிவித்து வரவேற்றார். பின்னர் தமிழக அரசின் செலவில் 8 பேரும் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான்:- தாய்லாந்தில் சிக்கிய தவித்தவர்களில் முதற்கட்டமாக 18 நபர்களையும், 2-ம் கட்டமாக 8 பேைரயும் மீட்டு அழைத்து வந்திருக்கிறோம். இதில் கேரள மாநிலத்தை சேர்ந்த ஒருவரும் உள்ளார். தவறான வழிகாட்டுதல் செய்கின்ற ஏஜெண்டுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 10 நாட்களுக்கு முன்பு தந்த புகார்கள் அடிப்படையில் திருச்சியை சேர்ந்த இருவர் மீது வழக்குப்பதிவு செய்து குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்கள்.துறை சார்பாக தகவல் தெரிவிக்க 3 எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பெற்றோர்களும், இளைஞர்களும் உடனுக்குடன் தொடர்பு கொண்டு அதன் தொடர்ச்சியாக மீட்கும் பணி நடந்து வருகிறது.நைஜீரியாவில் சிக்கி உள்ள தமிழர்களை மீட்க பிரதமர், வெளியுறவு துறை மந்திரி ஆகியோருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். விரைவில் அவர்களை மீட்கும் பணி நடக்கும். இதுவரையில் வெளிநாடுகளில் சிக்கி தவித்த 600-க்கும் மேற்பட்டவர்களை மீட்டு தமிழகத்துக்கு அழைத்து வந்து உள்ளோம். இவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை கொடுக்கின்ற வாய்ப்பு நிச்சயமாக இருக்கின்றது.இவ்வாறு அவர் கூறினார்.