
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை திருநாவலூர் காவல் ஆய்வாளர் அசோகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது இருந்தை பகுதியில் சந்தேகப்படும்படியாக வந்த மினிலாரியை காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது அதில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மினிலாரி ஓட்டுநரிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அவர் நாச்சிப்பட்டு பகுதியை சேர்ந்த சாமிநாதன் மகன் மயில்சாமி(வயது 39) என்பதும்,ரேஷன் அரிசி கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மயில்சாமியை கைது செய்த காவல்துறை, 3½டன் ரேஷன் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினிலாரியையும் பறிமுதல் செய்து விழுப்புரம் குடிமை பொருள் மற்றும் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.