மாயமான 19 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எங்கே!” – விளக்கம் கேட்கும் கர்நாடக சபாநாயகர்.!

கர்நாடக சட்டசபையில் கடந்த செவ்வாய்க்கிழமை, தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த சிறப்பு விவாதம் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் பாட்டீல், ஆர்.டி.ஐ பதில்களை மேற்கோள்காட்டிப் பேசினார். “தேர்தல் ஆணையம், BEL மற்றும் இந்திய எலக்ட்ரானிக்ஸ் கார்பரேஷனின் (ECIL) ஆர்.டி.ஐ தகவலின் படி, 9,64,270 இ.வி.எம்-கள் மற்றும் 9,29,992 இ.வி.எம்-கள் என கிட்டத்தட்ட 19 லட்சம் இ.வி.எம்-களை காணவில்லை. அந்த இயந்திரங்கள் எங்குச் சென்றன என்பது யாருக்கும் தெரியாது” என்று பேசியிருந்தார்.அவரைத் தொடர்ந்து பேசிய முன்னாள் சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ் குமார், “இது ஒரு பெரிய மோசடி, இந்த விவகாரம் குறித்து விளக்கமளிக்கத் தேர்தல் ஆணைய அதிகாரிகளைச் சட்டசபைக்கு வரவழைக்க வேண்டும்” என்று சபாநாயகரிடம் வலியுறுத்தினார். அப்போது பேசிய சபாநாயகர் காகேரி, பாட்டீலிடம் உள்ள விவரங்களைச் சமர்ப்பிக்கும் படி கேட்டுக்கொண்டார்.

அதோடு, “எனது அதிகாரத்தைப் பயன்படுத்தி உங்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்குத் தேர்தல் ஆணையத்தின் பதில்களையும், தீர்வுகளையும் வழங்க முயற்சிப்பேன்” என்று பதில் கூறினார்.கடந்த 2019-ம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த மனோரஞ்சன் ராய், தேர்தல் ஆணையம் கொள்முதல் செய்யும் வாக்குப்பதிவு மற்றும் விவிபேட் இயந்திரங்கள் குறித்தும், அவை எப்படி பாதுகாக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தார். அதில் அவருக்கு கிடைக்கப்பெற்ற பதில்களின் அடிப்படையில், கிட்டத்தட்ட 19 லட்சம் இயந்திரங்கள் கணக்கில் வராதது தெரியவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *