
திருவள்ளூர்: திருவாலங்காடு சின்ன களக்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் விரியூர் கிராமத்தை சேர்ந்த அன்பரசி என்பவருக்கும் முகநூல் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. அன்பரசி தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த நிலையில், அவர்களது பழக்கம் காதலாக மாறி பின்னர் திருமணத்தில் முடிந்தது.இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமணன் – அன்பரசிக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது, அன்பரசி வீட்டில் இருந்து 7 பவுன் நகையும், ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும் சீர்வரிசையாக கொடுத்துள்ளனர். அன்பரசி வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், திருமணத்திற்கு பிறகு லட்சுமணனின் தாயார் தேவகி அவரை வன்கொடுமை செய்து வந்துள்ளார்.மேலும் வீட்டில் தனி அறை, தனி பாத்திரங்கள் கொடுத்து கொடுமை படுத்தியதோடு, அவரது குழந்தையை கூட தூக்கி கொஞ்சுவதில்லை என கூறப்படுகிறது. கணவரும், தனது தாயுடன் சேர்ந்து கொண்டு அன்பரசியை கொடுமை படுத்தியதையடுத்து, அன்பரசி திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அவர் மாவட்டட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில், தனது கணவர் மற்றும் அவரது தாயார் சேர்ந்து தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், மாமியார் தேவகி, துடப்பத்தால் தன்னை தாக்குவதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகளையும் கொடுத்துள்ளார்.வேறு சமூகத்தை சேர்ந்த பெண் என்பதால், கணவருடன் சேர்ந்து வாழ விடாமல் தடுப்பதாகவும், தன்னை தகாத வார்தைகளால் திட்டுவதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் அன்பரசி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.