
மத்தியபிரதேசம்: குணா வனப்பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது, அங்கு மறைந்திருந்த மான் வேட்டை கும்பல், போலீஸ் எஸ்ஐ உட்பட 3 போலீஸ்காரர்களை சுட்டுக் கொன்ற சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் மான்கள் அதிகமாக வாழ்கின்றன. இந்நிலையில் மான்களை வேட்டையாடும் கும்பல் ஒன்று, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த மூன்று காவலர்களை சுட்டுக்கொன்றனர். இதுகுறித்து குணா போலீஸ் எஸ்பி ராஜீவ் மிஸ்ரா கூறுகையில், ‘அரோன் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில், துப்பாக்கி ஏந்திய மான் வேட்டைக்காரர்கள் சுற்றித்திரிவதாக தகவல் கிடைத்தது.அதையடுத்து போலீஸ் குழுவினர் அந்த கும்பலை தேடி வனப்பகுதிக்குள் சென்றனர். அப்போது போலீஸ் குழுவை நோக்கி மறைந்திருந்த வேட்டை கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியது. போலீசார் தரப்பில் பதிலடி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. ஆனால், அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வேட்டை கும்பல் துப்பாக்கியால் சுட்டதால், 3 காவலர்கள் உயிரிழந்தனர்.

அவர்களில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஜாதவ், தலைமை காவலர் சாந்த் குமார் மீனா, காவலர் நீரஜ் பார்கவ் ஆகியோர் அடங்குவர். போலீஸ் வாகனத்தின் ஓட்டுநரும் காயமடைந்துள்ளார்.அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வனப்பகுதியில் இருந்து மான்களின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன’ என்றார். இச்சம்பவம் குறித்து மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கூறுகையில், ‘எஸ்ஐ உட்பட 3 போலீஸ்காரர்கள் பலியான சம்பவம் தொடர்பாக, அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்.

மான் வேட்டை கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றார். இதனிடையே, இந்த சம்பவம் குறித்து மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் இன்று உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.