
சென்னை: சென்னை நகரின் மையப் பகுதியாக எழும்பூர் உள்ளது. இங்கு ரெயில் நிலையம், அரசு மருத்துவமனைகள், பள்ளி கூடங்கள் உள்ளன. மாநகராட்சி 5-வது மண்டலத்திற்கு உட்பட்ட 61-வது டிவிசனை உள்ளடக்கிய இந்த பகுதியில் வாகனங்கள் ஆக்கிரமிப்பு செய்ததால் பொதுநல வழக்கை முன்னாள் கவுன்சிலர் வக்கீல் ருக்மாங்கதன் தொடர்ந்தார். பாந்தியன் சந்து, தமிழ் சங்கர் சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் 100-க்கு மேற்பட்ட வியாபாரிகள் நடைபாதையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்வதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவதாக கூறி அவற்றை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். எந்தெந்த பகுதிகளில் வியாபாரம் செய்யலாம், எந்த இடங்களில் வியாபாரம் செய்யக்கூடாது என கோர்ட்டு விளக்கம் அளித்ததோடு ஆக்கிரமிப்பு வியாபாரிகள் இடத்தை காலி செய்ய வேண்டும் என கூறி மாற்று இடம் கூவம் ஆற்றோரம் ஒதுக்கப்பட்டது. ஆனால் இதுவரையில் சாலையோர ஆக்கிரமிப்பாளர்கள் கடைகளை அகற்ற வில்லை. இந்த நிலையில் கடந்த மாதம் பள்ளி, மருத்துவமனை, கோவில்கள் அமைந்துள்ள 100 மீட்டர் சுற்றளவு பகுதியில் சாலையோர கடைகளை அனுமதிக்க கூடாது என்று கூறி சென்னை மாநகராட்சியிடம் நீதிபதி விளக்கம் கேட்டார். அதன் அடிப்படையில் விரைவில் 100 மீட்டர் தூரத்தில் உள்ள கடைகளை அகற்றி விடுவதாக மாநகராட்சி தகவல் பிரமான உறுதி பத்திரம் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. மாநகராட்சி சட்டக்குழு இதுபற்றி மண்டல அலுவலருக்கு தெரிவித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தி உள்ளது. ஆலயம், மருத்துவமனை, பள்ளிக்கூடம் உள்ள பகுதிக்கு அருகில் சாலையோர கடைகளை அகற்றுவதற்கான நடவடிக்கை விரைவில் தொடங்க உள்ளது. இது குறித்து வக்கீல் ருக்மாங்கதன் கூறியதாவது:- 2018-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் இதுவரையில் மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. சாலை யோரத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் இன்னும் செயல்பட்டு கொண்டுதான் இருக்கின்றன. பொதுமக்களுக்கு இடையூறாக சாலையோர கடைகளை அகற்றினால் தான் நடைபாதையில் செல்ல முடியும். மருத்துவமனை, பள்ளி போன்ற இடங்களில் ஆக்கிரமிப்பாளர்கள் செயல்பாட்டால் பொது மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.