‘மாணவியிடம் எப்படி பேசலாம்’ மாணவர்களிடையே மோதல்.!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி – திருவண்ணாமலை சாலையில் தேவபாண்டலம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கிவருகிறது. இந்தப் பள்ளியில் அந்த ஊரை சுற்றிலும் உள்ள சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள்.இந்தப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வரும் மாணவி ஒருவர் சங்கராபுரம் அருகில் உள்ள ஒரு கிராமத்திலிருந்து தினசரி அரசு டவுன் பஸ்ஸில் வந்து செல்வார். வழக்கம்போல் நேற்று பஸ்சில் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சங்கராபுரத்தில் அரசு பாலிடெக்னிக் படிக்கும் மாணவன் ஒருவன், அந்த மாணவியிடம் பஸ்ஸில் வரும்போது பேசிக் கொண்டு வந்துள்ளார்.இதை பார்த்த மாணவியுடன் படிக்கும் சக மாணவன் ஒருவன், எப்படி எங்கள் பள்ளி மாணவியிடம் நீ பேசலாம் என்று பஸ்ஸை விட்டு இறங்கியதும் பாலிடெக்னிக் மாணவனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து இரு தரப்பைச் சேர்ந்த மாணவர்களும் தனித்தனி கோஷ்டியாக ஒருவருக்கு ஒருவர் பஸ் நிலையத்தில் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.இந்தத் தகவல் அறிந்த சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தகராறில் ஈடுபட்ட இருதரப்பு மாணவர்களையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதோடு மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் மீண்டும் மாணவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அரசு மேல்நிலைப்பள்ளி அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *