மழையால் வீடு இடிந்து தந்தை, மகள் பலி: தூங்கிக் கொண்டிருந்தபோது பரிதாபம்.!!

அம்பாசமுத்திரம்: தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் மழையால் வீடு இடிந்து விழுந்ததில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தந்தை மற்றும் மகள் உயிரிழந்தனர். காயமடைந்த தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஆழ்வார்குறிச்சிப் பேரூராட்சி 2 ஆவது வார்டு வாகைக்குளம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் கல்யாணி (60). இவர் மனைவி வேலம்மாள் (55) மற்றும் இளைய மகள் ரேவதி (26) ஆகியோருடன் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.நேற்று மாலையிலிருந்து இந்தப் பகுதியில் மழை பெய்து வந்த நிலையில் இரவு 11 மணியளவில் கல்யாணி வீடு இடிந்து விழுந்ததாம். வீடு விழுந்த சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.மேலும் தகவலறிந்து தென்காசி மற்றும் ஆலங்குளத்தில் இருந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.இதில் இடிபாட்டில் சிக்கி தூங்கிக் கொண்டிருந்த கல்யாணி, ரேவதி இருவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த வேலம்மாள் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மீட்புப் பணிகளில் தென்காசி மாவட்ட தீயணைப்பு அலுவலர் கவிதா, உதவி மாவட்ட அலுவலர் வெட்டும் பெருமாள், கடையம் காவல் ஆய்வாளர் ரெகுராஜன் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு மீட்புப்படையினர் மற்றும் காவலர்கள் ஈடுபட்டனர். மேலும் ஆழ்வார்குறிச்சி காவலர்கள் கல்யாணி, ரேவதி ஆகியோர் சடலத்தை பிரேதப்பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ஆழ்வார்குறிச்சி காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *