
சென்னை: மனித உரிமைகள் ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் கொத்தடிமைத் தொழிலாளர்கள், குழந்தைத் தொழிலாளர்கள், ஆள்கடத்தல் தடுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம், சென்னை, பசுமை வழிச்சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆணையத்தின் தலைவர் நீதிபதி சா.பாஸ்கரன், செயலாளர் கே.விஜயகார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். அமெரிக்க துணைத் தூதரக அதிகாரிகள் விர்ஸா பெர்கின்ஸ், கார்த்திக் செல்வராஜ், கீதா கோபாலகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் நீரஜ் மித்தல், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் டிஜிபி சுனில் குமார், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன இயக்குநர் சி.என்.மகேஸ்வரன், சமூகப் பாதுகாப்புத் துறை இயக்குநர் எஸ்.வளர்மதி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு காவல் கண்காணிப்பாளர் வி.ஜெயா,சமூக ஆர்வலர்கள் என 20-க்கும் மேற்பட்ட பல்வேறு துறை பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து. 2025-ம் ஆண்டுக்குள் குழந்தைத் தொழிலாளர் இல்லா தமிழகம் எனும் இலக்கை எட்டுவது, வெளிநாடுகளில் வேலை செய்யும் தமிழர்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களைத் தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து தங்களுடைய கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் ஆணையத் தலைவர் சா.பாஸ்கரன் கூறியதாவது: கொத்தடிமை தொழிலாளர்கள், குழந்தைத் தொழிலாளர்கள், ஆள்கடத்தல் தடுப்பு குறித்த கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம். குறிப்பாகஇந்தியா மற்றும் அமெரிக்காவில் பின்பற்றப்படும் தொழிலாளர் மேம்பாட்டு அம்சங்கள் குறித்து அமெரிக்கதுணை தூதரக அதிகாரிகளுடன் விவாதித்தோம். பாதிப்புக்குள்ளாகும் தொழிலாளர்களுக்கு சிறந்த வகையில் நிவாரணம் வழங்குதல் குறித்த ஆலோசனையும் நடத்தப்பட்டது.தொடர்ந்து கருத்து பரிமாற்ற நிகழ்வு: கரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சந்தித்த பிரச்சினைகள், வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் ஈட்டும் ஊதியத்தை தமிழகத்துக்கு அனுப்புவதில் உள்ள பிரச்சினைகள் என துறை சார்ந்து இருக்கும் பிரச்சினைகள் குறித்தும், அதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடினோம். வரும் காலத்திலும் இது போன்ற கருத்து பரிமாற்ற நிகழ்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.