மனிதநேயத்துடன் செயல்பட்ட பத்திரிகையாளர்கள்.!

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த உடனே தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் சிக்கிய நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.இந்தச் சம்பவம் குறித்து அறிந்த உடனே மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அங்கு வந்து ஆய்வு செய்தார். பின்னர் இந்த விபத்தில் எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை என உறுதிப்படுத்தினார். இந்நிலையில் தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தின் மேல்தளத்தில் இருந்த பொதுமக்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது அங்கு செய்தி சேகரித்துக் கொண்டிருந்த பத்திரிகையாளர்களும் அவர்களுடன் சேர்ந்து பொதுமக்களை மீட்ட சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. இது குறித்து சென்னை பத்திரிகையாளர் மன்றம் , பொதுமக்களை மீட்ட பத்திரிகையாளர்களைப் பாராட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், “சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கல்லீரல் சிகிச்சை பிரிவு அருகில் மின்கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரத்திற்கு மேலாகப் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.இந்த தீ விபத்து தொடர்பாக செய்தி சேகரிக்கும் பணியில் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்துறையினர் ஈடுபட்டிருந்தனர். தீ விபத்தினால் ஏற்பட்ட கரும்புகை பரவி அருகில் இருந்த நரம்பியல் துறையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் அந்த நோயாளிகளை தீயணைப்புத் துறையினரும் நோயாளிகளின் உறவினர்களும் பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.தீ விபத்து சம்பவத்தை வீடியோ மற்றும் புகைப்படங்கள் மூலம் பதிவு செய்து கொண்டிருந்த திருவாளர்கள்: ஜோதி ராமலிங்கம் ( தி இந்து புகைப்படக் கலைஞர்) சிவா (தினகரன் புகைப்படக் கலைஞர்) பிரதாப் (டைம்ஸ் ஆஃப் இந்தியா புகைப்பட கலைஞர்) அஸ்வின் (தி இந்தியன் எக்ஸ்பிரஸ் புகைப்படக் கலைஞர்) விஜி ( தினமலர் சி.என்.எஸ் புகைப்பட கலைஞர்) சண்முக சுந்தரம் (தினத்தந்தி புகைப்பட கலைஞர்) சத்தியசீலன் ( தினமலர் புகைப்படக் கலைஞர் ) குமரேசன் ( நக்கீரன் புகைப்படக் கலைஞர்) முருகேசன் (புதிய தலைமுறை செய்தியாளர்) பிரமோத் (இந்தியா டுடே செய்தியாளர் ) சுகுமார் (இந்தியா டுடே ஒளிப்பதிவாளர்) ஐயப்பன் (புதிய தலைமுறை ஒளிப்பதிவாளர்) உள்ளிட்ட பத்திரிகையாளர்களும் களத்தில் இறங்கி நோயாளிகளை மீட்கும் பணியில் சிறப்பான பங்களிப்பை செய்துள்ளனர்.ஒருபக்கம் செய்தி சேகரிக்கும் கடமையில் ஈடுபட்டுக் கொண்டே மனித நேயத்துடன் செயல்பட்ட பத்திரிகை, ஊடக உறவுகளின் சேவை பொதுமக்கள் மத்தியில் பத்திரிகை உலகிற்கு பெரும் மதிப்பைப் பெற்றுத்தந்துள்ளது. நோயாளிகளுக்கு மனித நேயத்துடன் உதவிய பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *