
சென்னை: சென்னையில் மெட்ரோ ரெயில் 2-வது திட்டப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. மாதவரம்- சிறுசேரி சிப்காட் இடையேயான 45.48 கி.மீ வழித்தடத்தில் மந்தைவெளி-அடையாறு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் 26.7 கி.மீ தூரத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.மந்தைவெளி-அடையாறு இடையே சுரங்க வழித்தடம் அமைவதால் அதற்கான சுரங்கப்பணிகளை மேற்கொள்ளும்போது விரிசல், கட்டிடங்கள் சேதம் ஏற்படக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு ஆய்வுப்பணி மேற்கொள்ளப்பட்டது.மெட்ரோ ரெயில் என்ஜினீயர்கள் மேற்கொண்ட கள ஆய்வில் 196 கட்டிடங்கள் பாதிக்கக்கூடும் என்று ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறியதாவது:-சுரங்கப்பாதை அமைகின்ற மந்தைவெளி- அடையாறு வழித்தடத்தில் 25 மீட்டர் சுற்றளவில் 200 கட்டிடங்கள் இருக்கின்றன. 119 கட்டிடங்கள் மந்தைவெளி-கிரீன்வேஸ் சாலையிலும் 77 கட்டிடங்கள் கிரீன்வேஸ் சாலை-அடையாறு சந்திப்பு இடையே உள்ளன. சுரங்கப்பாதை அமைகின்ற இந்த வழித்தடத்தில் சுரங்கம் தோண்டும் எந்திரம் மூலம் பணிகள் மேற்கொள்ளும்போது அதிர்வுகள், விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதா? கட்டிடங்களின் அஸ்திவாரம் பலமாக உள்ளதா? என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.கட்டிடங்கள் பலம் இல்லாமல் மோசமாக இருந்தால் அதனை அகற்றம் செய்யவும் அதற்கான இழப்பீட்டு தொகை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சுரங்கம் தோண்டும் பணி அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் தொடங்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.மந்தைவெளி-அடையாறு மற்றும் கெல்லீஸ்- தரமணி இடையே அமைகின்ற இரட்டை வழி சுரங்கப்பாதை டெண்டர் எல் அண்ட் டி நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது. கெல்லீஸ்-தரமணி சுரங்க வழித்தடத்தில் 8 எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.மெட்ரோ ரெயில் 2-வது திட்டத்தில் 1309 கட்டிடங்கள் பாதிக்கக்கூடும். அதில் 3-வது வழித்தடத்தில் மட்டும் 281 வணிக கட்டிடங்கள் உள்ளிட்ட 374 கட்டிடங்கள் பாதிக்கும் என்று திட்ட அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.