
சென்னை: இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முதுபெரும் தலைவர் ஆர்.நல்லகண்ணு அவர்களின் 98 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் நேரில் வாழ்த்தினார். மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்த முதல்வர் அவரை வாழ்த்தி மேடையில் பேசினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் மேடையில் பேசிய போது ஆர்.நல்லகண்ணுவுக்கு தமிழக அரசின் சார்பில் தகை சால் தமிழர் விருது வழங்கப்பட்டது. இவர்களுக்கு வழங்கியதால் தான் விருதுக்கே பெருமை. நானும் வாழ்த்தி வணங்க கடமைப்பட்டுள்ளேன். பாஜக ஆட்சிக்கு எதிராக நாம் எடுத்து வரும் முயற்ச்சிக்கு நல்லகண்ணு உறுதுணையாக இருக்கிறார் என கூறினார். இதனை தொடர்ந்து பேசிய நல்லகண்ணு முதல்வருக்கு என் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அமைச்சர்கள் ஏ.வ.வேலு, பொன்முடி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோருக்கு என் நன்றிகள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துவக்க நாளை கொண்டாடும் வகையிலும் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. எனக்கு நேரில் வந்து வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. பரிபூரண சுதந்திரம் என்பது குறித்து முதலில் பேசிய பெருமை கம்யூனிஸ்ட் இயக்கத்தை சேரும். சுதந்திரம் பெற்ற இந்த நாட்டை பாதுகாக்க வேண்டும் என்றால் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் இருக்க வேண்டும். போராடி பெற்ற இந்த சுதந்திரத்தை மத்திய அரசு மதத்தை வைத்து சீரழிக்க முயற்சிக்கிறார்கள், அதை எதிர்த்து ஒன்றுபட்டு முயற்சிக்க வேண்டும். மத வெறி கொண்ட சக்திகள் ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்றும் தனது கருத்தை தெரிவித்தார் நல்லகண்ணு.