
லக்னோ: வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை மற்றும் பணவீக்கம் போன்ற பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் பாஜக மத உணர்வுகளைத் தூண்டி வருவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தேசிய தலைவர் மாயாவதி புதன்கிழமை குற்றம் சாட்டினார்.செய்தியாளர் சந்திப்பில் பேசிய மாயாவதி, மத வழிபாட்டுதலங்கள் வேண்டுமென்றே குறிவைக்கப்படுகிறது. பாஜகவின் இந்த சதி குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.எதிர்வரும் நாள்களில் நாட்டின் நிலைமை மோசமாகும் என்று மாயாவதி எச்சரித்துள்ளார்.தேசத்தை பலவீனப்படுத்த ஞானவாபி மசூதி, மதுரா மற்றும் தாஜ்மஹால் போன்ற பிரச்னைகள் எழுப்பப்படுகின்றன என்று மாயாவதி கூறினார்.குறிப்பிட்ட மதத்தினருக்கு சொந்தமான இடங்களின் பெயர்களும் ஒவ்வொன்றாக மாற்றப்படுகின்றன. இது நாட்டின் அமைதி, நல்லிணக்கம், சகோதரத்துவத்தை சீர்குலைத்து, வெறுப்பை ஏற்படுத்தும். நாட்டின் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தேசிய தலைவர் மாயாவதி அவர்கள் கூறினார்.