மதுரை சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி பாலியல் பலாத்காரம் – ரவுடி கைது.!

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி 10-ம் வகுப்பு படித்துவிட்டு அதே பகுதியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. இதனால் பதட்டம் அடைந்த அவரது பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர் ஆனால் கிடைக்காததால். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் மாட்டுத்தாவணி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தங்களது மகளை வாலிபர் ஒருவர் கடத்திச் சென்று இருப்பதாக தெரிவித்திருந்தனர். சிறுமி கடத்தல் விவகாரம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் வடக்கு துணை கமிஷனர் ஆறுமுகசாமி மேற்பார்வையில் அண்ணாநகர் உதவி கமிஷனர் சூரக்குமார் ஆலோசனை பேரில் மாட்டுத்தாவணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் சிறுமியின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் வீட்டில் இருந்த அவரது செல்போனும் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது மாயமான சிறுமி கருப்பாயூரணியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் அடிக்கடி பேசி இருப்பது தெரியவந்தது. அந்த செல்போன் சிக்னல் கருப்பாயூரணி பகுதியை காட்டியது. இதையடுத்து தனிப்படை போலீசார் அந்த பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் சிறுமி வாலிபருடன் தங்கி இருப்பது தெரியவந்தது. போலீசார் சிறுமியை மீட்டு வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் கருப்பாயூரணியைச் சேர்ந்த கரண் (வயது 25) எனவும், இவர் மீது மாட்டுத்தாவணி காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. மாட்டுத்தாவணி பகுதியில் ரவுடியாக வலம் வந்த கரண் சிறுமி வேலைக்கு செல்லும்போது பின்தொடர்ந்து சென்றுள்ளார். நாளடைவில் இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இதனை சிறுமியின் பெற்றோர் கண்டித்து உள்ளனர். ஆனால் அதனை அவர் கண்டு கொள்ளாமல் குற்ற வழக்குகள் உள்ள கரணை காதலித்து வந்துள்ளார். சம்பவத்தன்று கரண் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதையடுத்து சிறுமி வீட்டைவிட்டு வெளியேறி கரனுடன் சென்றுள்ளார். வெளியூர் சென்ற இருவரும் அங்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து உள்ளனர். அப்போது சிறுமியை கரண் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். மேற்கண்ட தகவல்கள் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கரணை மாட்டுத்தாவணி காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *