
மணிப்பூர்: மணிப்பூரில் பல இடங்களில் தாக்குதல் நடத்தியது தொடர்பாக, 12 நபர்களை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, பெண்கள் தலைமையில் 1200 முதல் 1500 பேர் வரையிலான பொதுமக்கள் ராணுவத்தை சுற்றி வளைத்து சிறை வைத்தனர். அதோடு கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். நேற்று முழுக்க போராட்டக்காரர்களுடன் ராணுவத்தினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
12 பேரையும் விடுவிக்காமல் நகரமாட்டோம் என்று கூறி இரவு முழுக்க ராணுவத்தினரை சுற்றி வளைத்து பொதுமக்கள் அமர்ந்திருந்தனர். இதையடுத்து இன்று(ஜூன் 25) 12 பேரையும் ராணுவத்தினர் விடுதலை செய்தனர். மணிப்பூர் கலவரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி, சூரசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள லம்கா பகுதியில் பழங்குடியின மாணவர் குழு கருப்பு உடை அணிந்து அமைதி சவப்பெட்டி பேரணி நடத்தினர். மேலும், வன்முறையில் உயிரிழந்த பழங்குடியினர் உடல்களை முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும் என பழங்குடியின மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.