
புதுடெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு மைதேயி சமூகத்தினருக்கும் குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த 3-ந்தேதி தொடங்கிய போராட்டம் வன்முறை மோதலாக மாறியது. 45 நாட்களுக்கு மேலாக அங்கு கலவரம் நீடித்து வருகிறது. மணிப்பூர் கலவரத்தில் இதுவரை 120-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 310 பேர் காயம் அடைந்துள்ளனர். ஏராளமானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இம்பால் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த சம்பவத்தில் மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் ராணுவ வீரர் காயம் அடைந்தார். இதை தொடர்ந்து முதல்-மந்திரி பிரேன்சிங் கடுமையாக எச்சரித்து உள்ளார். வன்முறையை நிறுத்தாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அவர் கூறியுள்ளார்.
மாநிலத்தில் இயல்பு நிலை திரும்ப மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் நீடிப்பதால் அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று எதிர் கட்சிகள் உள்ளிட்ட பல அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் முதல்-மந்திரி பதவியில் இருந்து பிரேன்சிங் நீக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.இந்த நிலையில் மணிப்பூர் கலவரம் தொடர்பான வழக்கை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு இன்று மறுத்துவிட்டது.
குகி பழங்குடியினருக்கு ராணுவ பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும், கலவரத்தை கட்டுப்படுத்த அதிக அளவில் ராணுவத்தை குவிக்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த வழக்கு ஜூலை 3-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.