
விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஏனாதிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி மகன் ராஜா, 36; விவசாய பாதுகாப்பு சங்க தகவல் தொழில்நுட்ப மாவட்ட செயலாளர். இவர் ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார். இதனால் இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த மாசி மகன்கள் முருகதாஸ், பழனி, ஆறுமுகம் ஆகியோருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில், ஆற்றில் அனுமதி வழங்கியதை விட அதிகளவில் மணல் கொள்ளை நடப்பதாக ராஜா பேட்டி அளித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த முருகதாஸ், பழனி, ஆறுமுகம் ஆகியோர் பைக்கில் சென்ற ராஜாவை வழிமறித்து ஆயுதங்களால் தாக்கினர். படுகாயமடைந்த ராஜா முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். ராஜா அளித்த புகாரின் பேரில் முருகதாஸ், பழனி, ஆறுமுகம் ஆகிய 3 பேர் மீது திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.