
சென்னை: சென்னை, மதுரை, உட்பட 9 முக்கிய நகரங்களில் போலியான ஊரக வங்கியை நடத்தி பெண்களை குறி வைத்து பட்டதாரி வாலிபர் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் உதவி பொது மேலாளர் சென்னை காவல்துறை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், ‘ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் வங்கி’ என்ற பெயரில் போலியான வங்கி செயல்பட்டு வருவதாகவும் இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுபற்றி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி, துணை கமிஷனர் தங்க ஜோதி ஆகியோரது மேற்பார்வையில் கூடுதல் துணை கமிஷனர் பிரபாகரன், உதவி கமிஷனர் முத்துக்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சென்னை அம்பத்தூர் உள்பட 9 ஊர்களிலும் போலி வங்கி செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அம்பத்தூர் லேடான் தெருவில் போலி ஊரக வங்கியின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வந்துள்ளது. அங்கு சென்று காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்றிருப்பது போல போலி சான்றிதழ் தயாரித்து வங்கியை மோசடியாக நடத்தியதும் விசாரணையில் தெரிய வந்தது.சென்னையை போன்று மதுரை, திருமங்கலம், ஈரோடு, நாமக்கல், சேலம், விருதுநகர், கள்ளக்குறிச்சி, கோவை, பெரம்பலூர் ஆகிய 8 இடங்களிலும் போலி வங்கி செயல்பட்டது தெரியவந்தது.இந்த போலி வங்கியை திருமுல்லைவாயலை சேர்ந்த சந்திரபோஸ் என்பவர் மிகவும் துணிச்சலாக நடத்தி வந்தது வெளிச்சத்துக்கு வந்தது. இதைத் தொடர்ந்து சந்திரபோசை போலீசார் கைது செய்தனர். சென்னையை போன்று வெளி மாவட்டங்களிலும் போலி வங்கியில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினார்கள்.வங்கி கணக்கில் இருந்த ரூ.56 லட்சத்து 65 ஆயிரத்து 336 பணமும், சந்திரபோசின் பென்ஸ் காரும் பறிமுதல் செய்யப்பட்டது. மோசடி ஆசாமியான சந்திரபோஸ், ஊரக பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு பெண்களை குறிவைத்து ரூ.100 கோடி அளவுக்கு பணத்தை சுருட்டியாக கூறப்படுகிறது. இந்த மோசடி வித்தையை அரங்கேற்றி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் போலி வங்கியை இவர் நடத்தி வந்ததும் இதன் மூலம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை வாடிக்கையாளர்களாக சேர்த்திருப்பதும் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.லண்டனில் எம்.பி.ஏ. படித்துள்ள சந்திரபோஸ் வங்கி செயல்பாடுகள் பற்றிய தகவல்களை படித்துள்ளார். இதை வைத்தே அவர் மோசடி ஈடுபட்டு வந்துள்ளார் என்று முதல் கட்டமாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.