
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் வல்லம் பகுதியில், மரபு சார் அமைப்பு தலைவர், திருவண்ணாமலையைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ராஜ் பன்னீர் செல்வம் மற்றும் உதயராஜா , வெடால் விஜயன் இணைந்து தொல் அடையாளங்களைக் கள ஆய்வு ஆரம்பித்தனர்.அப்போது,வல்லம் ஊராட்சிக்கு உட்பட்ட இளமங்கலம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டபோது, சுமார் 30 அடி உயரமுடைய தட்டையான பாறையின் மீது கட்டப்பட்டுள்ள பிள்ளையார் கோயில் ஒன்று உள்ளது. அதில்,சதுரமான பலகை கல்லில் சக்கரத்துடன் கூடிய 11 வரி கல்வெட்டு இருப்பதைக் கண்டு ஆய்வு மேற்கொண்டனர்.ஸ்ரீகோவிசைய என்று தொடங்கும் இக்கல்வெட்டு இரண்டாம் நந்திவர்மனின் 14 வது ஆட்சியாண்டு, அதாவது கி.பி 745 ஆம் வருடம் சிங்கபுரி நாட்டு கீழ்வழி இளமங்கலத்தில் உள்ள திருவடிகளுக்கு கற்றளி எழுப்பித்து , அத்தளிக்கு நந்தவனம் செய்து தந்ததாக கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதனை அருவாரையர் காடடிகன் மகன் கல்லறையோன் என்பவர் செய்ததாகவும் , இத்தருமத்தைக் காப்பவர்களின் பாதத்தை தன் முடிமேல் வைத்துத் தாங்குவேன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.பாதங்களை வணங்கும் வழக்கம் சமணம் , பௌத்தம் மற்றும் வைணவம் ஆகிய மூன்று சமயங்களிலும் காணப்படும்.ஆனால் இங்கு \”திருவடிகள்\” என்ற வார்த்தையும் அத்திருவடிக்குக் கற்கோயில் எழுப்பித்த செய்தியும் எந்த சமயம் என்று நேரடி தகவலைத் தரவில்லை.இவ்வூரின் ஏரிக்கரைப் பகுதியில் சுமார் 5 அடி உயரம் கொண்ட பிரமாண்ட பிரம்ம சாஸ்தா சிற்பம் மற்றும் லிங்க ஆவுடை சிதைந்து காணப்பட்டது. இந்த சிற்பத்தின் காலம் 9 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என தோன்றுகிறது. இதனை வைத்து பார்க்கையில் ஊரில் பெரிய சிவன் கோயில் இருப்பதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது.மேலும் கிடைத்த தகவல்களை வைத்து பார்க்கையில் வைணவம், சமணம் ஆகிய சமயத்தை சேராது என்பது தெளிவாகிறது.377ஆகையினால் இக்கல்வெட்டு \”பௌத்தம்\” சமயம் சார்ந்ததாகத் தான் இருக்கும். பௌத்த சமயத்தில் புத்தரின் பாதத்தை வணங்கும் முறை பரவலாகக் காணப்படுகிறது.

மேலும் இவ்வூருக்கு மிக அருகாமையில் பள்ளிகுளம் , இந்திரசன்குப்பம் என்ற பௌத்த சொல்கள் உடைய ஊர்ப்பெயர்களும் புழக்கத்தில் உள்ளது.பௌத்தர்கள் வணிக தொடர்பு உடையவர்கள் என்பதால் காஞ்சிபுரத்தில் இருந்து சோழ நாட்டுக்குச் செல்லும் ராஜபாட்டை அமைந்த பகுதிகளில் ஆங்காங்கே பௌத்த சமயத்திற்கு உரிய தடயங்கள் காணப்படும் . இவ்வூரும் அந்த ராஜபாட்டையை ஒட்டி அமைந்த ஊராகும்.மேலும் தமிழ்நாட்டில் இதுவரை பௌத்தம் சார்ந்து புத்தர் சிலை , தர்மசக்கரம் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் , பௌத்த கோயில் எழுப்பியதற்கான சான்றாக கண்டுபிக்கபட்டுள்ள முதல் கல்வெட்டு இதுவாகும்.மேலும் இவ்வூரை சேர்ந்த மணிகண்டன் இந்த தகவலின் அடிப்படையில், தர்மகர்த்தா சாமி என்ற பெயரில் தவ்வை சிற்பம் ஒரு வீட்டின் பின்புறம் வழிபாட்டில் உள்ளது அறியப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக எட்டு கரங்களுடன் எருமை தலை மீது நின்ற கோலத்தில் பல்லவர் காலத்திய கொற்றவை காளி அம்மன் என்ற பெயரில் பொது மக்கள் வழிபட்டு வருகின்றனர்.மேலும் இதுபோன்ற இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வெட்டையும் சிலைகளையும் தொல்லியல் துறை பாதுகாக்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது மக்களும் இதனை பாதுகாக்க வேண்டும் எனவும் இக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.செய்தியாளர் : ஜீவரட்சகன்- விழுப்புரம்