‘போலிச்சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த 300 வடமாநிலத்தவரை உடனடியாகப் பணிநீக்கம் செய்ய அழுத்தம் கொடுக்க வேண்டும். சீமான் வலியுறுத்தல்..!!

போலிச்சான்றிதழ் கொடுத்து மத்திய அரசுப் பணியில் சேர்ந்த 300 வடமாநிலத்தவரை உடனடியாகப் பணிநீக்கம் செய்ய அழுத்தம் கொடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசுப் பணியிடங்களில் போலிச்சான்றிதழ் கொடுத்து 300க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர் வேலைக்குச் சேர்ந்திருப்பது கடும் அதிர்ச்சியளிக்கிறது. முறைகேடான வழிகளில் தமிழர்களது வேலைவாய்ப்புகளைத் தொடர்ந்து பறித்துவரும் வடமாநிலத்தவர்களின் மேலாதிக்கத்தைத் தடுக்கத்தவறி கைகட்டி வேடிக்கை பார்க்கும் திராவிட அரசுகளின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.மத்திய அரசின் பொதுத்துறை நிறுவன வேலை வாய்ப்பில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று குஜராத், மத்தியப்பிரதேசம், உத்தரகண்ட், மிசோரம், சிக்கிம், மணிப்பூர், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தனிச்சட்டமே இயற்றியுள்ளன. அதுபோன்று தனியார்த் துறைகளில் 80 விழுக்காடு அளவுக்கு மண்ணின் மைந்தர்களுக்குப் பணி வாய்ப்பு வழங்க வேண்டுமென்று கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, ஹரியானா உள்ளிட்ட மாநில அரசுகள் சட்டமியற்றியுள்ளன.ஆகவே, திமுக அரசு இனியாவது விழித்துக்கொண்டு தமிழர்களது பணிவாய்ப்புகள் வடவர்களிடம் பறிபோவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பணியிடங்களில் 80 விழுக்காடு தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டியது கட்டாயம் என்று நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே தனிச்சட்டம் நிறைவேற்றி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் ஒருகோடி தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.மேலும், போலிச்சான்றிதழ் கொடுத்து மத்திய அரசுப் பணியில் சேர்ந்த 300 வடமாநிலத்தவரை உடனடியாகப் பணிநீக்கம் செய்ய மத்திய அரசிற்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும், நிகழ்ந்துள்ள இம்முறைகேடு குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு முறைகேட்டில் தொடர்புடைய அனைவருக்கும் சட்டத்தின் மூலம் உரிய தண்டனைக் கிடைக்க வழிவகைச் செய்ய வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *