போர் எதிரொலி: மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து ரஷியா தற்காலிக இடைநீக்கம் – ஐ.நா. சபை அறிவிப்பு.!

ஜெனீவா,ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் ஜெனீவாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. 47 உறுப்பினர்கள் கொண்ட மனித உரிமை கவுன்சிலில் உறுப்பினராக சேர, ஐ.நா. பொதுச்சபையின் 193 நாடுகளால் மூன்றாண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதில் ரஷியாவும் உறுப்பினராக உள்ளது.இந்த சூழலில், உலகின் மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்த மனித உரிமை அமைப்பில் இருந்து, ரஷியாவை நீக்க அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது.உக்ரைன் தலைநகரை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து, ரஷிய வீரர்கள் பின்வாங்கும் போது அங்குள்ள பொதுமக்களை கண்மூடித்தனமாக கொன்றனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. புச்சா பகுதியில் நடைபெற்ற படுகொலை சம்பவங்களை தொடர்ந்து, 47 உறுப்பினர்கள் கொண்ட மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷியாவை நீக்க வேண்டும் என்று அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ் கிரீன்பீல்ட் அழைப்பு விடுத்திருந்தார்.

இதனையடுத்து நடைபெற்ற ஐ.நா கூட்டத்தில் பேசிய உக்ரைன் பிரதிநிதி, ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷிய கூட்டமைப்பின் உறுப்பினர் உரிமையை ரத்து செய்ய வேண்டும் என்பது ஒரு வாய்ப்பல்ல. அது ஒரு கடமை என கூறினார்.இதனைத்தொடர்ந்து ஐநா பொதுச் சபையின் அவசரகால சிறப்பு அமர்வில் ரஷியாவை அகற்றுவது குறித்து வாக்கெடுப்பு தொடங்கி நடைபெற்றது.இந்நிலையில் மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷியா தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. ரஷியாவை சஸ்பெண்ட் செய்யும் தீர்மானத்திற்கு 93 நாடுகள் ஆதரவு தெரிவித்தநிலையில், 24 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. 58 நாடுகள் வாக்களிக்கவில்லை. முன்னதாக ரஷியாவை இடைநிறுத்துவதற்கான வரைவு தீர்மானத்தின் மீது வாக்களிப்பதை இந்தியா புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *