பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் குழந்தையை கடத்தியது ஏன்?- கைதான கேரள பெண் வாக்குமூலம்.!!

பொள்ளாச்சி:

பொள்ளாச்சி குமரன் நகரை சேர்ந்தவர்கள் யூனிஸ், திவ்யபாரதி தம்பதி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த திவ்யபாரதி பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த 29-ந் தேதி பெண் குழந்தை பிறந்தது.திவ்யபாரதியும், குழந்தையும் ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சையில் இருந்தனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் திவ்யபாரதி தூங்கி கொண்டிருந்த போது, மர்மநபர்கள் அவரது பெண் குழந்தையை கடத்தி சென்றனர்.தூக்கத்தில் இருந்து எழுந்த அவர் குழந்தை காணாததால் அதிர்ச்சியடைந்து கணவருக்கு தகவல் கொடுத்தார்.பின்னர் 2 பேரும் மருத்துவமனை முழுவதும் தேடி பார்த்தனர். ஆனாலும் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் தம்பதியினர் தங்களது உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து மருத்துவமனையை முற்றுகையிட்டு குழந்தையை கண்டுபிடித்து தரக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அறிந்ததும் காவல் துறை சூப்பிரண்டு பத்ரி நாராயணன் மருத்துவமனைக்கு விரைந்து சென்று, பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டார்.மேலும் கடத்தப்பட்ட குழந்தையையும், கடத்தியவர்களை கைது செய்ய 3 துணை காவல் சூப்பிரண்டு தலைமையில் 6 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார்.அவர்கள் அரசு மருத்துவமனையில் கண்காணிப்பு கேமிரா இருக்கிறதா என தேடினர். ஆனால் அரசு மருத்துவமனையில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்படாததால் மருத்துவமனை எதிரே அமைந்துள்ள வணிக வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தனர்.அப்போது இளம்பெண் ஒருவர் கட்டைப்பையில் குழந்தையை ஆட்டோவில் கடத்தி சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த பெண்ணுடன் ஒரு சிறுமியும் சென்றார். அவர்கள் குழந்தையுடன் பஸ்சில் தப்பியிருக்கலாம் என சந்தேகித்தனர்.அதன் அடிப்படையில் தனிப்படையினர் கோவை, திருப்பூர் மற்றும் பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளில் பஸ் நிலையம், கடைகள் உள்ளிட்டவற்றில் உள்ள 200-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்ததுடன், அந்த பகுதிகள் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டனர்.பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்ட போது, அந்த இளம்பெண், பாலக்காடு ரெயிலில் ஏறி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. காவல் துறையினர் பாலக்காடு விரைந்து சென்றனர். அங்கிருந்த கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்த போது கடத்தப்பட்ட குழந்தையுடன் இளம்பெண்ணும், சிறுமியும் ஒலவக்கோடு ரெயில் நிலையத்தில் ரெயிலை விட்டு இறங்கி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.விசாரணையில் குழந்தையை கடத்திய பெண் கொழிஞ்சாம்பாறை அருகே உள்ள கொடுவாயூர் பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.உடனடியாக காவல் துறையினர் அங்கு விரைந்து சென்று வீட்டில் பதுங்கி இருந்த இளம்பெண்ணையும், 15 வயது சிறுமியையும் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் கடத்தப்பட்ட குழந்தையையும் மீட்டனர்.தொடர்ந்து அவர்களை தனிப்படை காவல் துறையினர் பொள்ளாச்சிக்கு அழைத்து வந்தனர்.குழந்தை மீட்கப்பட்ட தகவல் காவல் துறை சூப்பிரண்டு பத்ரி நாராயணனுக்கும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் பொள்ளாச்சி வந்து, நேராக மருத்துவமனைக்கு சென்று, குழந்தையை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தார். குழந்தையை பெற்றுக் கொண்ட பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்.இதையடுத்து குழந்தையை கடத்திய இளம்பெண்ணை காவல் துறையினர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில், அந்த இளம்பெண்ணின் பெயர் சமீனா என்பதும், தனது 15 வயது மகளுடன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் இருந்து குழந்தையை கடத்தி சென்றதும் தெரியவந்தது.சமீனா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-நான் கொடுவாயூர் பகுதியில் வசித்து வருகிறேன். எனக்கு 15, 13 வயதில் மகள்களும், 10 வயதில் மகனும் உள்ளனர். கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக நானும், எனது கணவரும் பிரிந்து விட்டோம்.இதையடுத்து நான் எனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தேன். அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து நானும், அவரும் கணவன், மனைவி போல ஒன்றாக வாழ்ந்து வந்தோம்.எனக்கு 3 குழந்தைகள் இருந்தாலும், என்னுடன் சேர்ந்து வாழும் வாலிபர் தனக்கென்று ஒரு குழந்தை இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். எனக்கு வயிற்றில் ஏற்பட்ட கட்டி காரணமாக வயிறு பெரிதாக இருந்தது. வாலிபர் கேட்டபோது நான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தேன்.இந்தநிலையில் வாலிபர் வெளியூருக்கு வேலைக்கு சென்று இருந்தார். அந்த சமயம் ஏதாவது குழந்தையை கடத்தி தனக்கு குழந்தை பிறந்து விட்டதாக கூறி விடலாம் என நினைத்தேன். அதன்படி பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு வந்தேன்.அதிகாலை 4.30 மணியவில் மருத்துவமனையில் ஒரு நோயாளியை போல சென்று நோட்டமிட்டேன். நேராக பிரசவ வார்டுக்கு சென்றபோது, அங்கு குழந்தை தொட்டிலில் இருந்தது. அருகே பெற்றோர் நன்றாக தூங்கி கொண்டிருந்தனர். இதனை எனக்கு சாதகமாக பயன்படுத்தி குழந்தையை தூக்கி கட்டைபையில் வைத்து கொண்டு அங்கிருந்து எதுவும் தெரியாதது போல சென்று விட்டேன்.பின்னர் அங்கிருந்து பொள்ளாச்சி ரெயில் நிலையம் சென்று எனது சொந்த ஊருக்கு சென்று விட்டேன். ஆனால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி என்னை பிடித்து விட்டனர்.இவ்வாறு அவர் கூறினர்.இதையடுத்து போலீசார் சமீனாவை கைது செய்தனர். அவரது 15 வயது மகளிடம் விசாரணை நடந்து வருகிறது. அவருக்கும் இந்த குழந்தை கடத்தல் விவகாரத்தில் தொடர்பு இருந்தாலும் அவரும் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.குழந்தை கடத்தலில் சமீனா அளித்துள்ள வாக்குமூலம் உண்மைதானா, அவருடன் வேறு யாருக்கும் தொடர்பு உண்டா, குழந்தையை விற்பனை செய்வதற்காக கடத்திச் சென்றாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *